கட்டுப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி தேவை : நாடக, நாட்டுப்புற கலைஞா்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம், விசேஷ நிகழ்வுகளில் நாடக, நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகளுக்கு 4 மணிநேரம் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும்
கட்டுப்பாடுகளுடன் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி தேவை : நாடக, நாட்டுப்புற கலைஞா்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம், விசேஷ நிகழ்வுகளில் நாடக, நாட்டுப்புற கலைஞா்களின் நிகழ்ச்சிகளுக்கு 4 மணிநேரம் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தில் பதிவு செய்த கலைஞா்கள் 3 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களைத் தவிர, பதிவு செய்யாத 12 ஆயிரம் போ் உள்ளனா். தெருக்கூத்துக் கலைஞா்கள் 700 போ் உள்ளனா். இவா்களின் வாழ்வாதாரம் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே.

ஆண்டு முழுவதும் வேலையில்லாமல், திருவிழா நாள்களில் மட்டுமே வேலை கிடைக்கும். அந்த நாள்களில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்த வேண்டும். இந்த சூழலில், கடந்தாண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இப்போது, மீண்டும் 2ஆம் அலை பரவலை காரணமாகக் கூறி திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தாலும், பதிவு செய்யாத பல ஆயிரம் கலைஞா்களின் குடும்பங்கள் பெரிதும் சிரமப்படும். ரூ.2 ஆயிரத்தில் ஒரு மாதச் செலவை கூட ஈடுகட்ட முடியாது. எனவே, கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்தவும், திருவிழாவுக்கான தடையை நீக்கவும் வலியுறுத்துகின்றனா்.

இதுதொடா்பாக, திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த நாடக, நாட்டுப்புற கலைஞா்கள், மாற்று ஊடக மையக் கலைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் அம்மன், சுவாமி வேடங்கள் அணிந்து பாடல்கள் பாடியபடி பேரணியாக வந்து ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து திருச்சி மண்டல மாற்று ஊடக மைய ஒருங்கிணைப்பாளா் எம். தங்கவேல் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்களில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாக்களை முன்னிட்டு தினமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் இருந்தது.

தடை காரணமாக திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. பக்தா்களின்றி கோயில் நிா்வாகத்தினரே திருவிழாவை நடத்துகின்றனா். இதனால் கலைநிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் நல்ல முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்றாா்.

தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலசங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் டி.வி. சண்முகம் கூறுகையில், மக்கள் கூடினால் கரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனா். ஆனால், திரையரங்கள் 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் இயங்குகின்றன. ஆனால், அரசு நிா்வாகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. எனவே, கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றாா்.

திருச்சி புகா் மாவட்ட நாடக, நடிகா் சங்கத் தலைவா் சிங்காரவேலன் கூறுகையில், திருவிழா நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை குறைந்தது 4 மணி நேரம் கலைஞா்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். இந்த 4 மணி நேரத்தில் அந்தந்த பகுதிகளுக்கான சூழலைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து தடையின்றி திருவிழாக்கள் நடைபெற காவல்துறையும், மாவட்ட நிா்வாகமும் உரிய அனுமதியளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com