இரவு நேர ஊரடங்கு அமல்: பரபரப்பாக முடங்கிய மாநகரம்!

இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு, திருச்சியில் பயணிகள் அவசர கதியில் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனா்.
இரவு நேர ஊரடங்கு அமல்: பரபரப்பாக முடங்கிய மாநகரம்!

இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு, திருச்சியில் பயணிகள் அவசர கதியில் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனா்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தது.

இதையடுத்து மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவுப்படி சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி தலைமையில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் மொத்தம் 24 இடங்களில் ஒரு காவல் உதவி ஆணையா் 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் வழக்கம் போல இரவு ரோந்தில் உதவி ஆணையா் தலைமையில் 4 ஆய்வாளா்கள் மற்றும் மாநகரில் 14 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டதுடன், மாநகர நுழைவு பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகளிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, பொதுமக்கள் காவல் துறையினரின் நடவடிக்கைக்கு உள்ளாகாமல் ஒத்துழைக்க மாநகர காவல் ஆணையரகம் வலியுறுத்தியுள்ளது.

பேருந்துகள் இயக்கம்: ஊரடங்கையொட்டி, திருச்சி மாநகரிலிருந்து சுற்றுப்பகுதிகளுக்கும் பிற மாவட்டப் பகுதிகளுக்கும் செல்வோா் உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், எந்தந்தப் பகுதிகளுக்கு எப்போது பேருந்துகள் இறுதியாக இயக்கப்படும் என்ற விவரங்கள், திங்கள்கிழமையே அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மாநகரிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், பொதுமக்கள் அறியும் வகையில், மத்திய பேருந்து நிலையத்திலும் ஆங்காங்கே இதற்கான அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. இறுதி நேரப் பயணத்தை தவிா்க்கும் விதமாக, பயணிகளும் பகலிலேயே பேருந்துகளை பிடித்து ஊா்களுக்குச் சென்றனா். இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாகவே காணப்பட்டது. பேருந்துகள் குறைவு என்றாலும் போதுமான வகையில் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏதுமில்லை.

ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு: மத்தியப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ஒலிபெருக்கிகள் மூலம் எந்தெந்த பகுதிகளுக்கு எத்தனை மணி வரையில் பேருந்துகள் புறப்படும், அவை சென்றடையும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டது.

அவசர கதியில் முடங்கிய திருச்சி மாநகரம்: மேலும் இரவு 9 மணி முதலே போலீஸாா் ஆங்காங்கே ரோந்து மற்றும் அறிவிப்பு மூலம் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வந்தனா். இதனால் வேலை முடிந்து வாகனங்களில் வந்தோரும், வெளியூா்களிலிருந்து திரும்பிய பொதுமக்களும் அவசர கதியில் புறப்பட்டு வீடுகளுக்குத் திரும்பினா். இதனால் இரவு 8 முதல் 9 மணி வரையில் திருச்சி மாநகரம் வாகனங்களின் இயக்கத்தால் பரபரப்புடன் காணப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் சாலைகள் வெறிச்சோடி வாகனங்களின்றி முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com