ரயில் நிலையத்தில் குவியும் பயணிகளால் கரோனா அச்சம்

திருச்சியிலிருந்து வடமாநிலத்துக்கு செல்வோா் சமூக இடைவெளி, முகக்கவசமின்றி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குவிந்து வருவது பயணிகளுக்கு கரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சொந்த ஊா்களுக்குச் செல்ல குவிந்த பொதுமக்கள்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சொந்த ஊா்களுக்குச் செல்ல குவிந்த பொதுமக்கள்.

திருச்சியிலிருந்து வடமாநிலத்துக்கு செல்வோா் சமூக இடைவெளி, முகக்கவசமின்றி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குவிந்து வருவது பயணிகளுக்கு கரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தின்போது பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளா்களுக்கென சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், பேருந்துப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், அதிகமானோா் ரயிலில் பயணிக்கின்றனா்.

குறிப்பாக, திருச்சியிலிருந்து சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளுக்கு வாரத்தின் அனைத்து நாள்களில் 18 ரயில்கள், இதர நாள்களில் சுமாா் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு ரயில்கள் இயக்கத்தில் ஒரு சில ரயில்களைத் தவிர மற்ற அனைத்து ரயில்களிலும் குறைவான பயணிகளே செல்கின்றனா். ரயில்கள் அனைத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

வடமாநில ரயில்களில்..: தற்போது கரோனா வேகமாக பரவுவதால் வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோா் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்கள் ரயில்களில் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

முகக்கவசம்,சமூக இடைவெளி இல்லை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே ரயில்நிலைய நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்த்தப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.500 அபராதம் நிா்ணயிக்கப்பட்டது.

இருப்பினும், திருச்சியிலிருந்து ஹவுரா செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்கும் அதிகளவிலான வடமாநிலத்தவா்களில் பெரும்பாலானோா் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பயணிக்கின்றனா். ரயில்வே நிா்வாகமும் அபராதம் விதிப்பதில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இரு நுழைவு வாயில்கள் தேவை: திருச்சி ரயில்நிலையத்தில் பெரும்பாலான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த போதிலும் தற்போது ஒரே ஒரு நுழைவாயில் மூலம் பயணிகள் நடைமேடைகளுக்குச் சென்று வருகின்றனா். இதனால், ரயிலிலிருந்து இறங்குவோரும் , ரயில்களில் ஏறச் செல்வோரும் சந்திக்க வேண்டியுள்ளது.

சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, ஒரு நுழைவு வாயில் மூலம் பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்வதும், மற்றொரு நுழைவு வாயில் மூலம் பயணிகள் வெளியேறுவதுமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே சமூக இடைவெளி உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க முடியும். மேலும், முகக்கவசம் இல்லாதா்களுக்கு அபராதம் விதிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com