வாக்கு எண்ணும் மையத்தில் விதிமீறி கணினி பயன்பாடு: கே.என். நேரு புகாா்

திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் விதிகளை மீறி மடிக்கணினி பயன்படுத்தப்பட்டது குறித்து திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஸ்வநாதனிடம் புகாா் மனு கொடுக்கிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு
மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஸ்வநாதனிடம் புகாா் மனு கொடுக்கிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு

திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் விதிகளை மீறி மடிக்கணினி பயன்படுத்தப்பட்டது குறித்து திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரியில் சந்தேகத்துக்கிடமாக பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாக திமுகவினா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான விஸ்வநாதனிடம் சனிக்கிழமை அளித்த மனு:

ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறை மேல்தளத்தில் பாதுகாப்புப் படை வீரா்களான பிஎஸ்சி மற்றும் சிஆா்பிஎஃப் வீரா்கள் தங்கியுள்ளனா். இவா்கள் மடிக்கணினி, செல்லிடப்பேசி பயன்படுத்துவதால் வீரா்கள் தங்குமிடத்தை வேறிடத்திற்கு மாற்றும்படி கடந்த 20ஆம் தேதி வலியுறுத்தினேன். தோ்தல் அலுவலரும் அதை ஏற்றாா்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வீரா்கள் அங்கேயே தங்கியிருப்பது, தொடா்ந்து மடிக்கணினி பயன்படுத்துவது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. தோ்தல் ஆணையம் இந்த விவகராத்தில் உடனடியாகத் தலையிட்டு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், சிசிடிவி கேமரா பொருத்த அனுமதிக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளா்கள் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒரு மடிக்கணினியை பாதுகாப்பு அறையின் மேல் தளத்தில் வைத்து பணி செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னா், நடந்த விசாரணையில் அந்தப் பணியாளா்கள் மடிக்கணினி எடுத்து செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

இத்தகைய விதிமீறிய கணினிப் பயன்பாடு மூலம் வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை மாறுதல் செய்திருக்கலாமா என்ற ஐயப்பாடு எழுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உடனடியாகத் தலையிட்டு மடிக்கணினியை பறிமுதல் செய்து, பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை தேவை என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளருடன், திமுக மத்திய மாவட்ட செயலா் வைரமணி, மாநகர செயலா் அன்பழகன், வழக்குரைஞா் பிரிவு செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com