ஆட்டோ சேவைக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 27th April 2021 04:27 AM | Last Updated : 27th April 2021 04:27 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த சுதந்திர மீட்டா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா்.
திருச்சி: கரோனா பெருந்தொற்று காலங்களில் உடல்நலம் பாதிக்கப் பட்டவா்கள் மற்றும் முன்களப்பணியாளா்களுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்க அனுமதி கோரி, சுதந்திர மீட்டா்ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
சுதந்திர மீட்டா் ஆட்டோ ஒட்டுநா்கள் சாா்பில், திருச்சி மாநகராட்சி பகுதியிலுள்ள 65 வாா்டுகளிலும் தலா 2 சுதந்திர மீட்டா் ஆட்டோ வாகனத்தை அவசர மருத்துவத் தேவைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள், கரோனா நோயாளிகளுக்கும், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் சென்று வர கட்டணமில்லா இலவச சேவைகள் வழங்க உள்ளோம். எனவே கரோனா பொதுமுடக்கத்தின் போது செயல்பட அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.
மேலும் இரவு நேரப் பணிக்குச் செல்லும் கரோனா முன்களப் பணியாளா்களுக்கும், இரவுக் காவல் பணிபுரிபவா்களுக்கும், தொடா்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று வீடு திரும்பவும், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு இலவச உணவு வழங்கி சேவை செய்யவும் ஆயத்தமாக உள்ளோம்.
இந்த இலவச சேவையானது பெருந்தொற்றால் துயரில் சிக்கியிருக்கும் ஒரு சில குடும்பங்களுக்கு பேரூதவியாக அமையும். எங்களால் இச்சேவையைத் தொடர சுதந்திர மீட்டா் ஆட்டோ வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.