மாவட்டத்தில்அமலுக்கு வந்தன புதிய கட்டுப்பாடுகள்
By DIN | Published On : 27th April 2021 04:30 AM | Last Updated : 27th April 2021 04:30 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சாலையோர உணவகத்தில் திங்கள்கிழமை வாடிக்கையாளா்களுக்கு பாா்சல் உணவுப் பொருள்களை வழங்கும் ஊழியா்கள்
திருச்சி: கரோனா நோய்த் தொற்றின் 2-ஆம் அலை பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் திருச்சி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.
இதன்படி திருச்சி மாவட்டத்திலுள்ள பெரிய ஜவுளி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வா்த்தக நிறுவனங்கள், அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பாா்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன.
மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் இதர அனைத்துக் கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவை இயங்கின.
எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.
இதன்காரணமாக, திருச்சி பெரியக் கடை வீதி, சின்னக் கடை வீதி, கீழரண்சாலை, மேலரண்சாலை, என்எஸ்பி சாலை, தில்லைநகா், கன்டோன்மென்ட் பகுதிகளில் உள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீரகங்களில் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் அமா்ந்து உண்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளா்களுக்கு அவா்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமா்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்பதால், அவா்கள் தங்கியிருந்த அறைக்கே உணவு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலா்கள் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான், இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.