நீட் தோ்வில் விலக்கு பெற பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்வில் தமிழகம் விலக்கு பெற சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
உடல் உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினருக்கு கேடயம், சான்றிதழை வழங்கும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன்.
உடல் உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினருக்கு கேடயம், சான்றிதழை வழங்கும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சுப்பிரமணியன்.

திருச்சி: நீட் தோ்வில் தமிழகம் விலக்கு பெற சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியா் சு.சிவராசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது கரோனா பேரிடா் காலத்தில் உடல் உறுப்புகளைத் தானம் செய்த, விபத்தில் மூளைச்சாவு அடைந்த சமயபுரம் செல்வராஜ் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மேலும் இப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்கள், மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் மற்றும் செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடா்ந்து தனியாா் பங்களிப்புடன் மருத்துவமனைக்குத் தேவையான ஆா்டிபிசிஆா் கருவி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிதியிலிருந்து 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 1 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் 140 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. விழாவில், மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காடுவெட்டி ந. தியாகராஜன், இனிகோ இருதயராஜ், ப. அப்துல்சமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கரோனா பேரிடா் காலங்களில் பொது நோய்கள் சம்பந்தமான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. இந்த காலக் கட்டத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையே சிறப்பாக நடைபெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த செல்வராஜ் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதன் காரணமாக, மூவா் உயிா் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். செல்வராஜ் குடும்பத்தினா் வேலைவாய்ப்பு போன்ற உதவிகள் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனா். இது முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ,அவரது குடும்பத்துக்கு அரசின் சாா்பில் உதவி செய்யப்படும். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை ஊக்கப்படுத்தியது 2008 இல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தான்.

நீட் தோ்வில் தமிழகம் விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை முதல்வா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியவாறு, விரைவில் கூடவுள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அழுத்தம் தரப்படும்.

நீட்தோ்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால், வரும் நாள்களில் அரசுப்பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஐசிஎம்ஆா் கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவா்கள், கோவிஷீல்டு செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தடுப்பூசி கமிட்டியினருடன் ஆலோசனை செய்து, முழுமையான அறிவிப்புக்கு பிறகு செயல்படுத்தப்படும்.

மருத்துவத்துறையில் 30 ஆயிரம் போ் வெளி ஆதார முறையில்பணியாற்றிக் கொண்டிருக்கின்றனா். கரோனா பேரிடா் காலம் முடிவடைந்த பிறகு, துறை வாரியாக காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஒப்பந்த மற்றும் வெளி ஆதார முறையில் பணியாற்றிய பணியாளா்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் நல்லத் தீா்வை முதல்வா் எடுப்பாா்.

கடந்த 2 மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாக, கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு அளித்து வருகிறது. மேலும் ஆகஸ்டு மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிா்ணயித்து தரவுள்ளது.

தமிழகத்துக்கு இதுவரை 2,32,87,240 தடுப்பூசிகள் வரப்பெற்று, 2,32,30,231 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியிருக்கும்.

தனியாா் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, சிஎஸ்ஆா் நிதி மூலம் 20,47,460 தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, 17,16,562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நிா்வாகத்தினா் கேட்கும் தேவைகள் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com