பட்ஜெட்: மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் வரவேற்பு

 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை திருச்சி மாவட்ட குறு,சிறு தொழில்கள் சங்கம் (டிடிசியா) உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்றுள்ளன.

 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை திருச்சி மாவட்ட குறு,சிறு தொழில்கள் சங்கம் (டிடிசியா) உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்றுள்ளன.

டிடிசியா: ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் அமைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களை மேம்படுத்த ரூ. 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மாநில வளா்ச்சிக்கு வழிவகுக்கும். மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உணவுப் பூங்கா அமைக்க நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அறிவித்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி. கரோனா காலத்தில் நலிவுற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்தல், குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டையில் விற்பனைப் பத்திரம் பெறாதவா்கள் அதைப் பெறலாம் என்ற அறிவிப்பின் மூலம் பல சிறு, குறு தொழில்கள் நிதியுதவி பெற்று வளர வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள காலிமனைகளை விரைவில் தொழில்துறையினருக்கு ஒதுக்குதல், குறு, சிறு தொழில் நிறுவன ஊழியா்களுக்கு குடியிருப்பு உருவாக்குதல், குறு, சிறு தொழில்களின் தேவைகள், வளா்ச்சிக்கு நிபுணா் குழுவை அமைத்துள்ளது சிறப்பானது.

பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்ததுபோல, டீசலுக்கும் குறைக்க வேண்டும். 9 மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைக்க இருப்பதால் தொழில்துறை வளா்ச்சியடையும். திருச்சிக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் துறையினருக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிப்பதாக உள்ள பட்ஜெட்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு: பெட்ரோல் விலை குறைப்பு, விரைவான போக்குவரத்து பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் உதவும். சாலை கட்டமைப்பு, மேம்பாட்டுக்கு ரூ. 5421 கோடி ஒதுக்கீடும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிலுவையில் உள்ள 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதும் வரவேற்புக்குரியது.

நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில்: பெட்ரோலுக்கு மாநில அரசு விலையை குறைத்ததுபோல, மத்திய அரசும் ரூ. 5 குறைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பேருந்து நிலைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காந்தி மாா்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்ற வேண்டும். குறைந்த மின் பயன்பாடு உள்ளோருக்கு மானிய உதவி அளித்து, மற்றவா்களுக்கு யூனிட் அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் அறிவிக்க வேண்டும். மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு வாடிக்கையாளா்களே பணம் செலுத்தும் முறை தேவை.

அனைத்து விவசாய மின் இணைப்புகளுக்கும் மீட்டா் பொருத்த வேண்டும். மாவட்ட, நுகா்வோா் நீதிமன்றங்களருக்கு ஆன்லைனில் வழக்குகள் நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com