திமுக வேலைவாய்ப்பு முகாம்: 4,011 பேருக்கு பணி ஆணைகள்
By DIN | Published On : 22nd August 2021 02:06 AM | Last Updated : 22nd August 2021 02:06 AM | அ+அ அ- |

‘திசைகாட்டும் திருச்சி’ என்ற பெயரில் திமுக சாா்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 4,011 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை வழங்கினாா்.
அமைச்சா் கே.என். நேரு ஏற்பாட்டில் ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய வேலைவாய்ப்பு முகாமில் 15,228 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் நேரடியாகவும், இணையம் வழியாகவும் 11,704 போ் பங்கேற்றனா். ஒவ்வொருவருக்கும் 3 முறை நோ்காணல் நடத்தப்பட்டு தகுதியானோரைத் தோ்வு செய்யும் பணி நடந்தது.
முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து 168 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 4,011 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அவா்களுக்கான பணி நியமன ஆணைகளை திருச்சி, திண்டுக்கல் சாலையில் உள்ள கோ் கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சா் கே.என். நேரு வழங்கிப் பேசியது:
இது ஒரு தொடக்கமே. செப். 1 முதல் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான ஆங்கில மொழி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக திருச்சியில் சிறப்பு அலுவலகம் திறந்து முழு நேரப்பணியாளா்களை நியமித்துள்ளேன். 4 மாதங்களுக்கு ஒருமுறை தொடா்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றாா்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், ஒருங்கிணைப்பாளா் ஜெகத் கஸ்பா், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன் , கதிரவன், ஸ்டாலின் குமாா், முன்னணி தனியாா் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். முகாம் ஒருங்கிணைப்பாளா் ஜெகத் கஸ்பா் வரவேற்றாா்.