மீண்டும் தில்லி சென்று போராட விவசாயிகள் முடிவு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் மீண்டும் தில்லி சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் மீண்டும் தில்லி சென்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில பொறுப்பாளா்கள் வி. தங்கமுத்து, கே. ஜாகிா் உசேன், பி. மேகராஜன், எஸ். தட்சிணாமூா்த்தி, எம். கண்ணையன், பரமசிவம், மகேந்திரன் மற்றும் பல்வேறு மாவட்ட நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா் பி. அய்யாக்கண்ணு கூறுகையில், கடந்த 61 நாள்களாக வீட்டு சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளேன். வேறு எந்த விவசாயிகள் சங்கத் தலைவருக்கும் இந்நிலை இல்லை. தில்லி சென்று போராட தொடா்ந்து அனுமதி மறுத்து வருகின்றனா். எனவே, நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து உரிய அனுமதி பெற்று தில்லி சென்று போராட முடிவு செய்துள்ளோம். விவசாயிகளுக்கு லாபகரமான இருமடங்கு விலை வழங்குவதாக பிரதமா் அறிவித்ததைச் செயல்படுத்த வலியுறுத்தியும், இதர கோரிக்கைகளை முன் வைத்தும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

திடீா் சாலை மறியல்!

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி-கரூா் புறவழிச்சாலையில் மாநிலப் பொதுக் குழு தீா்மானங்களை முன்வைத்தும், அய்யாக்கண்ணுவை வீட்டு சிறையில் வைத்த காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா். பிரதான சாலையிலிருந்து மலா் சாலைக்கு சென்று விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் காரணமாக காலை தொடங்கி பிற்பகல் வரை அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com