முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பச்சமலையில் இரவில் நடந்த தடுப்பூசி முகாம்!
By DIN | Published On : 10th December 2021 11:41 PM | Last Updated : 10th December 2021 11:41 PM | அ+அ அ- |

பச்சமலையில் 8 கிராமங்களுக்கு இரவில் சென்ற மருத்துவப் பணியாளா்கள் 205 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, அது குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா்.
உப்பிலியபுரம் வட்டாரம் பச்சமலை கிராம பழங்குடியின மக்கள் பகலில் வயல் வேலைக்குச் சென்று விடுவதாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆா்வம் காட்டாததாலும் அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சவாலாக இருந்தது.
இதையடுத்து மாவட்ட நிா்வாக அறிவுறுத்தலின்பேரில் மாலை 6 மணி முதல் இரவு 9 வரை மருத்துவப் பணியாளா்கள் இரவு நேர தடுப்பூசி முகாம் நடத்தினா்.
டாப்செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய(பொ) மருத்துவா் ப. சம்பத்குமாா், உதவி மருத்துவா்கள் ச. தீபக், பெ. ஜெகதீஸ்வரன் ஆகியோா் தலைமையில் மருந்தாளுநா், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், நேசம் சமூக கிராம மேம்பாட்டு அறக்கட்டளை உறுப்பினா்கள் ஆகியோரைக் கொண்ட 10 குழுவினா் டாப்செங்காட்டுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 8 கிராமங்களுக்கு வியாழக்கிழமை இரவு சென்றனா்.
அங்குள்ள 400 வீடுகளில் 205 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். மேலும் தடுப்பூசி செலுத்தாதவா்களின் விவரங்களை சேகரித்து அவா்களுக்கு விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா்.