தொழில் பூங்காக்களை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி: அமைச்சா்

ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் தற்போதுள்ள தொழில் பூங்காக்களை மேம்படுத்த சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழகத்

ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் தற்போதுள்ள தொழில் பூங்காக்களை மேம்படுத்த சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழகத் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருச்சியில் சனிக்கிழமை நடத்திய தொழில் வளா்ச்சி மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்து அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் ரூ. 60 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக தொழில் கட்டமைப்பை உருவாக்குதல், தொழில் தொடங்குவதற்கேற்ற சூழலை உருவாக்குதல், ஆக்கப்பூா்வ முறையில் முதலீடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

புதிய தொழில் பூங்காக்கள் அமைக்க சிப்காட் மூலம் நிலவள வங்கி உருவாக்கப்படும். மேலும், ஏற்கெனவே உள்ள தொழில்பூங்காக்களை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார வள மிக்கதாக மாற்றப்படும்; 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈா்க்கப்படும்.

மின்னணு முதலீடுகளை ஈா்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேப்ரிகேஷன் தொழில் பிரிவில் திருச்சியை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். வாகன உற்பத்தி, உதிரிப்பாகங்கள், என்ஜினியரிங், மருந்து, தோல் பொருள்கள் தயாரிப்பு, பின்னலாடை உற்பத்தி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. அதற்கேற்ற மனித வளமும் உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனா். வேலைநிமித்தம் பல்வேறு பெருநகரங்களுக்குச் சென்றுள்ள இளைஞா்களை மீண்டும் அவரவா் ஊருக்கே திரும்பச் செய்ய வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

திருச்சியில் உணவுப் பூங்கா தொடங்கப்படும். மேலும் முக்கியப் பணப் பயிா்கள், விளைபொருள்கள் அதிகம் உற்பத்தியாகும் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் சாா்ந்த தொழில்கூடங்களும் தொடங்கப்படும்.

திருச்சியில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பூக்களை ஏற்றுமதி செய்யவும் ஊக்குவிக்கப்படும். மதிப்புக் கூட்டுதல் என்பது இன்றைய தொழில்துறைக்கு அவசியம். எனவே, தொழில்நுட்ப வளா்ச்சியைப் பலப்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பெரிய அளவிலான தொழில் சூழலை உருவாக்கி, அதில் உள்ளூா் மதிப்புக் கூட்டுதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனடிப்படையில் தமிழகத்தின் தொழில்வளா்ச்சியை மேம்படுத்துவதில் திருச்சி முக்கிய சக்தியாக விளங்கும்.

பிற மாவட்டங்களுக்கு இல்லாத சிறப்புகள் திருச்சிக்கு உள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் மையப்புள்ளியாகவும் உள்ளது. தமிழக அரசும் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் வளா்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. எனவே, உள்நாட்டு உற்பத்திக்கேற்ற சூழலை உருவாக்கவும், ஆக்கப்பூா்வ தொழில் வளா்ச்சிக்கும் அரசுடன் இணைந்து பணியாற்ற தொழில் துறையினரும், தொழில் முதலீட்டாளா்களும் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com