வரதட்சிணை குற்றங்கள்: தடுப்புக் குழுவும் நடவடிக்கை எடுக்கலாம்

வரதட்சிணைக் கொடுமைகள் குறித்து காவல்துறை மட்டுமே வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை மாறி, மாவட்ட வரதட்சிணை தடுப்புக் குழுவும் நடவடிக்கை எடுக்க முடியும்

வரதட்சிணைக் கொடுமைகள் குறித்து காவல்துறை மட்டுமே வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை மாறி, மாவட்ட வரதட்சிணை தடுப்புக் குழுவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற விழிப்புணா்வு பொதுமக்கள், பெண்களிடம் அதிகம் ஏற்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக, வரதட்சிணைத் தடுப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வரதட்சிணைத் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும் , செயலராக மற்றும் வரதட்சிணைத் தடுப்பு அலுவலராக மாவட்ட சமூக நல அலுவலரும் உள்ளனா். இக்குழுவின் 5 உறுப்பினா்களை மாவட்ட ஆட்சியா் நியமிப்பாா்.

வரதட்சிணை குறித்து போலீஸாா் மட்டுமே வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்பது மட்டுமே பலராலும் அறியப்பட்டுள்ளது. அதேநேரம், போலீஸாரின் கைது நடவடிக்கை தவிர, காவல்துறை மேற்கொள்ளும் மற்ற அனைத்து நடவடிக்கைகளையும், வரதட்சிணை தடுப்புக் குழுவும் எடுக்க முடியும். புகாா்கள் வரும்பட்சத்தில், வரதட்சிணை தடுப்புக் குழு அலுவலா் தொடக்க நிலையிலேயே இதற்குத் தீா்வு காண முயல்வாா். கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே சட்ட நடவடிக்கைக்குப் பரிந்துரைப்பாா்.

அதேநேரம், குடும்ப உறவுகளிடம் விரிசல் ஏற்படாத வகையில் சட்ட நடவடிக்கைக்குள்ளாகாமல் முன்கூட்டியே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இக்குழு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வரதட்சிணை தடுப்புக் குழு உறுப்பினரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினரும், குழந்தை மருத்துவ நிபுணருமான ஞானவேல் கூறியது:

பெண்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு யாரும் புகாா் தர முன் வருவதில்லை. இதனாலேயே காலம் கடந்தும் வரதட்சிணை கொடுமைகள் அதிகரிக்கின்றன. புதிய வரதட்சிணை சட்டப்படி, வரதட்சிணை வாங்கவோ, கொடுக்கவோ அல்லது உடந்தையாகவோ இருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்படும்.

வரதட்சிணை ரூ. 15 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும்பட்சத்தில், அந்த தொகையே அபராதமாக வசூலிக்கப்படும். இதைவிட முக்கிய விஷயம் வரதட்சிணை கேட்பதே குற்றமாகக் கருதப்படுகிறது. பெண் வீட்டாரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சிணை கேட்டாலே 6 மாத சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

ஊடகங்களில் தகவல் வெளியிட்டாலும் தண்டனை: திருமணத்தின்போது மகன் அல்லது மகளுக்காக தங்களது சொத்தில் ஒரு பகுதி அல்லது தொழிலின் ஒரு பகுதி அல்லது இரண்டையுமோ தானமாக கொடுத்ததாக செய்தித் தாள்கள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியிட்டால், 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதிக்கப்படும்.

இவை தொடா்பான வழக்குகள், வரதட்சிணை தடுப்புக் குழு சாா்பில் தொடரப்பட்ட நிலையில் இதுகுறித்த விசாரணைகளை மாநகர நடுவா் நீதிமன்றம் அல்லது முதல் வகுப்பு நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஆகியவை மேற்கொள்ளும்.

7 ஆண்டு வரை சட்டம் செல்லும்: ஒரு பெண்ணை அவரது கணவரோ அல்லது கணவரின் உறவினா்களோ வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தினால் 3 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும். அதேபோல திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் வரதட்சிணைக் கொடுமையால் பெண் உயிரிழந்தால், அதற்குக் காரணமானோருக்கு சுமாா் 7 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரைகூட விதிக்கப்படும். எனவே இச்சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பெற்று, வரதட்சிணையில்லா இந்தியா உருவாக சபதமேற்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com