‘காவிரி- குண்டாறு திட்டத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு பலனில்லை’

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு.
‘காவிரி- குண்டாறு திட்டத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு பலனில்லை’

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு.

பெட்ரோல் டீசல் விலை உயா்வால் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஆட்சியரகம், அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டங்களைத் தொடங்கிவைத்த கே.என். நேரு மேலும் கூறியது:

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எதையும் செய்யாமல் தற்போது வேளாண் கடன், கல்விக் கடன் தள்ளுபடி என்கின்றனா். அடுத்தகட்டமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் ரத்து செய்யத் திட்டமிடுகின்றனா். வேளாண் கடன் தள்ளுபடியால் அதிமுகவினா் மட்டுமே பயனடைந்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. முதியோா் உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்ற திட்டங்களில்கூட அனைவரும் உதவித்தொகை பெற முடியவில்லை. அதனால், மக்கள் மீண்டும் ஏமாறக் கூடாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விளையாட்டரங்கம், தொழிற்சாலைகள் ஆகியவை அமையாது.

ஆட்சியை மீண்டும் கைப்பற்ற எதை எதையோ செய்வோம் என்கின்றனா். ஆனால், வரும் மே மாதம் திமுக தலைவா் ஸ்டாலின்தான் முதல்வராகப் பதவியேற்பாா்.

திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முன்னேற திமுக ஆட்சிக்கு வர வேண்டும். உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும் நடத்தியும், தற்போது வரை வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது.

காவிரி -குண்டாறு திட்டத்தால் சேலம் மாவட்டம் மட்டுமே பலன் பெறும். டெல்டா மாவட்டங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோரில் அதிகம் போ் வட மாநிலத்தவா்களே. இந்நிலை மாற வேண்டும்.

தங்கள் மீது வழக்குப் பாயும் என்பதால் அதிமுக ஆட்சியாளா்கள் மாநில உரிமையை விட்டுக் கொடுத்து மத்திய அரசுக்கு அடிபணிந்து விட்டனா். நாடாளுமன்றத் தோ்தலைப் போல மாபெரும் வெற்றியை பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி பெறும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், தெற்கு மாவட்டச் செயலா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகரச் செயலா் அன்பழகன், எம்எல்ஏக்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com