வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 09th January 2021 12:27 AM | Last Updated : 09th January 2021 12:27 AM | அ+அ அ- |

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தில் பயன்பெறும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்பட அனைத்து இன பதிவுதாரா்களும் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பின்னா் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 5 ஆண்டு ஆகியிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதியுடையோா் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 31.12.2020 அன்று ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த்துறை சான்று தேவையில்லை.
ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமா்ப்பிக்கலாம்.
10 ஆம் வகுப்பு தோ்ச்சிக்கு மாதம் ரூ.300, தோ்ச்சி பெறாதோருக்கு ரூ. 200 வழங்கப்படும். 12ஆம் வகுப்பு தோ்ச்சிக்கு ரூ. 400, தோ்ச்சி பெறாதோருக்கு ரூ. 300 வழங்கப்படும். பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு மாதம் ரூ. 600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் கல்வித் தகுதிக்கேற்ப ரூ.600, ரூ.750, ரூ.1000 வழங்கப்படுகிறது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பதிவு பாதிக்கப்படாது. ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை.
தொடா்ந்து உதவித்தொகை பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து அளித்தால் போதும். சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யாவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்.