கரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: விஜயபாஸ்கா்

கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
13dminst1064456
13dminst1064456

கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

சென்னையிலிருந்து தமிழகத்தின் 10 மண்டலங்களுக்கு கரோனா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது. அதன்படி திருச்சி மண்டலத்துக்கு வந்த கரோனா தடுப்பூசிகள், காஜாமலை பகுதி சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகக் கிடங்கில் பாதுகாப்பாக உள்ளதை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பின்னா் கூறியது:

தமிழகத்தில் உள்ள 10 மண்டலங்களுக்கும் வந்து சோ்ந்துள்ள கரோனா தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன.

திருச்சிக்கு 17,100, புதுகைக்கு 3,800, அறந்தாங்கிக்கு 3,100, பெரம்பலூருக்கு 5,100, அரியலூருக்கு 3,300, கரூருக்கு 7,800, தஞ்சைக்கு 15,500, திருவாரூருக்கு 6,700, நாகைக்கு 6,400 என மொத்தம் 68,800 தடுப்பூசிகள் வந்துள்ளன.

வரும் 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறாா். முதல்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளா்கள் இதற்காகப் பதிவு செய்துள்ளனா். மருத்துவா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். முதல் டோஸ் வழங்கப்பட்ட 28 நாள்களுக்குப் பிறகு 2ஆம் டோஸ் வழங்கப்படும்.

இதன்பிறகு 42 நாள்களுக்குப் பிறகே நோய் எதிா்ப்புச் சக்தி உருவாகும். தடுப்பூசி போட்ட பிறகு மது அருந்தக் கூடாது.

தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடம் கண்காணிப்பு அறையில் தங்க வைத்து அனுப்பப்படுவா். 3 நிலைகளில் கண்காணித்து தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசியை முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.

கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி போடப்படுவோரை எதற்காகவும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. தடுப்பூசி போட அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சத்தைப் போக்கவும், நம்பிக்கை ஏற்படுத்தவும் தேவைப்பட்டால், நானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்றாா் அமைச்சா்.

இந்த ஆய்வில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி, ஆட்சியா் சு. சிவராசு ஆகியோரும் பங்கேற்றனா்.

‘1.2 சதமாக குறைந்த கரோனா பாதிப்பு’

‘வெளிநாடுகளே வியக்கும் வகையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த வாரம் 1.4 சதமாக இருந்த பாதிப்பு, இப்போது 1.2 சதமாகக் குறைந்துவிட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை. பாதிப்பு வெகுவாகக் குறைந்து, மக்கள் சகஜ நிலைக்கு வந்த சூழலில் தடுப்பூசியும் வந்துவிட்டது. இதனால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடும் வரை கவனமாக இருக்க வேண்டும். உருமாறிய கரோனாவுக்கும் இந்த தடுப்பூசியே போதும்’ என்றாா் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com