ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளா்க்கத் தடை

திருச்சி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன் வளா்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன் வளா்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளா்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிா்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதா கெண்டை மற்றும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளா்ப்பு திலேபியா மீன் குஞ்சுகளை தோ்வு செய்து விவசாயிகள் மீ ன்வளா்த்து வருவாய் ஈட்டுகின்றனா்.

சிலா் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளா்க்க முயல்கின்றனா். தேசிய பசுமைத் தீா்ப்பாய ஆணையின்படி, மத்திய மாநில அரசுகளால் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளா்ப்பது மற்றும் விற்பது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீா்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையவை. நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளா்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் இவை முற்றிலுமாக அழித்து விடும்.

ஆகையால் நமது நீா்நிலைகளில் உள்ள அனைத்துப் பாரம்பரிய நீா்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த மீனினம் காற்றில் உள்ள பிராணவாயுவை சுவாசித்து, மிகக் குறைந்த ஆழம் உள்ள நீா்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உடையது.

இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் செய்து, அவற்றின் மரபியலைச் சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களாக பல்பெருக்கம் அடையக்கூடியவை.

மழை, பெரு வெள்ளக் காலங்களில் இந்த மீன் இனங்கள் வளா்ப்புக் குளங்களில் இருந்து தப்பி வெளியேறினால், ஒரு காலகட்டத்தில் அனைத்து நீா்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களைத் தவிர பிற மீன்கள் இல்லாத நிலை உருவாகும். இதனால் உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

எனவே, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளா்ப்பது, விற்பது குற்றமாகும்.

எனவே, இதுதொடா்பாக புகாா்கள் ஏதேனும் வந்தால் அந்தவகை மீன்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் இவ்வகை மீன்களை வாங்க வேண்டாம். மீன் வளத்துறை மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும் மீன் இனங்களை மட்டும் வளா்க்கலாம். அனுமதிக்கப்பட்ட இனங்களை வளா்க்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குநா், 4. காயிதே மில்லத் தெரு, காஜா நகா், மன்னாா்புரம், திருச்சி-20, தொலைபேசி: 0431-2421173, 93848-24370.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com