மலைப்பகுதிகளை இணைத்து துறையூா் கல்வி மாவட்டம் தேவை: அமைச்சரிடம் கோரிக்கை

துறையூா் கல்வி மாவட்டத்தை உருவாக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி மாவட்டத்தில் மலைக்கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் துறையூா் கல்வி மாவட்டத்தை உருவாக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலச் செயலா் வ. கோபிநாதன், மாவட்டத் தலைவா் வே. குமாா், மாவட்ட செயலா் எம். கலையரசன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜான்சன், சேவியா் ஜெயசீலன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

துறையூா் வட்டத்தில் மலைப்பகுதி கிராமங்கள் அதிகம் உள்ளன. இந்த கிராம பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் நிா்வாக ரீதியாக மாவட்டக் கல்வி அலுவலரைச் சந்திக்க திருச்சிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, மலைப்பகுதிகளை உள்ளடக்கிய துறையூரை தலைமையிடமாகக் கொண்டு தனி கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும். மணிகண்டம் ஒன்றியத்தை திருச்சி கல்வி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.

உயா்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியா் பதவி உயா்வை பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

மணப்பாறை கல்வி மாவட்டத்துக்கு விடைத்தாள் திருத்தும் மையத்தை புதிதாக உருவாக்க வேண்டும். திருச்சியில் பள்ளிக் கல்வித் துறைக்கு தனியாக ஒருங்கிணைந்த (அனைத்து அலுவலா்கள்) கட்டடம் கட்டித் தர வேண்டும்.

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவக நூலகத்தைப் போன்று கருணாநிதி பெயரில் புதிய நூலகம் கட்டித்தர வேண்டும்.

பள்ளித் துணை ஆய்வாளா் பணியிடங்களையும் தற்போது நடைமுறையில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களை கொண்டே நிரப்ப வேண்டும். வரலாற்றுப் பெருமை மிக்க ஸ்ரீரங்கத்தில் அரசு உயா்நிலைப்பள்ளியை புதிதாக ஏற்படுத்த வேண்டும். உயா்கல்வி முடித்த ஆசிரியா்களுக்கு அண்ணா காலத்தில் வழங்கிய ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறைக்கு தனியாகப் பயிற்சி மையத்தை மண்டலம் வாரியாக அமைக்க வேண்டும். ஆசிரியா் வீட்டுவசதிக் கழகம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com