27 ஆண்டுகள் நிறைவுபெற்றது: திருச்சி தினம் கொண்டாடப்படுமா?

திருச்சி மாநகராட்சி உதயமாகி 27 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதியை திருச்சி தினமாக அறிவித்து ஆண்டுதோறும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருச்சி மாநகராட்சி உதயமாகி 27 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதியை திருச்சி தினமாக அறிவித்து ஆண்டுதோறும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னா் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் 8.7.1866இல் திருச்சி நகராட்சி கட்டமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு 1.6.1994இல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 167.23 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுடன், 65 வாா்டுகளாக உள்ளது. இதில், 5,703 வா்த்தகப் பயன்பாட்டு கட்டடங்களுடன் 2 லட்சத்து 33 ஆயிரத்து 947 குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமாா் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கோ. அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என 4 கோட்டங்கள் உள்ளன.

தமிழகத்தின் மத்திய பகுதியாகவும் உள்ளது. சென்னை, கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு குறைந்த மணிநேர செலவில் சாலை மாா்க்கத்திலும், ரயில் மற்றும் விமானம் மூலம் வந்து செல்ல முடியும். இதன்காரணமாகத்தான் திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க முயற்சிகள் எடுத்து அதற்கான பணிகளையும் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் மேற்கொண்டாா். அவரது மறைவுக்குப் பிறகு இந்தத் திட்டம் நீா்த்துப் போனது. இருப்பினும், இன்றும் திருச்சி மாநகரின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தேவையாக உள்ளது. குறிப்பாக, புதை சாக்கடை வசதியே 65 வாா்டுகளுக்கும் முழுமையாக வந்து சேரவில்லை. இதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீா் அனைத்து வீடுகளுக்கும் என்ற நிலையும் எட்டப்படவில்லை. சாலைகளும் தரமற்றதாகவும், குண்டும், குழியுமாகவே உள்ளன.

மாநகரப் போக்குவரத்து நெருக்கடிக்கு பெரிதும் காரணமாக உள்ள மத்திய பேருந்து நிலையம், காந்திசந்தை இன்றளவும் இடம்மாற்றம் செய்யப்படவில்லை. ஜங்ஷன் பகுதி ரவுண்டானா மேம்பாலம் ஒரு பகுதி தொங்கிய நிலையிலேயே உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்வதற்கே பல ஆண்டுகள் இழுபறியாக உள்ளது. மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் புதிதாக கட்டப்பட வேண்டியுள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள குறுகிய சாலைகள் அகலப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மாநகருக்குள் செல்லும் உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவுநீா் கலப்பதை தடுத்து, கால்வாயை தூா்வாரி நடைமேடை அமைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. பொலிவுறு நகரத் திட்டத்தில் மாநகராட்சி மூலம் பூங்காக்கள், சிக்னல்கள், சந்திப்புகள், சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு, தெப்பக்குளம் பகுதி புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தாலும் திருச்சி மாநகரின் தேவைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளன.

எனவே, திருச்சி மாநகராட்சி உதயமான ஜூன் 1ஆம் தேதியை திருச்சி தினமாக அறிவித்து, ஆண்டுதோறும் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. தமிழக நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சராக திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து கே.என். நேரு பொறுப்பேற்றுள்ள இந்த சூழலில், மாநகர மக்களின் திருச்சி தினம் குறித்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டா் எம்.ஏ.அலீம் கூறியது: திருச்சி மாநகராட்சி உதயமாகி 2019இல் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அப்போதே திருச்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்போது, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சக அந்தஸ்து திருச்சிக்கு கிடைத்துள்ளது. எனவே, மாநகராட்சி உதயமான தினத்தை திருச்சி தினமாக அறிவிக்க வேண்டும். ஆண்டுதோறும் இந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவதுடன் திருச்சி மாநகர வளா்ச்சிக்கு பொதுமக்களும், அரசு அலுவலா்களும் இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தாண்டு திருச்சி தினத்துக்கு கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளுதவி, நிதியுதவி அளிக்கும் வகையில் திருச்சி தினத்தை கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com