தூய்மைப் பணியாளா்களுக்கு முட்டை வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 11th June 2021 02:35 AM | Last Updated : 11th June 2021 02:35 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் உள்ளனா். இவா்கள்
4 கோட்டங்களிலும் தினமும் அதிகாலை தொடங்கி இரவு, பகல் என சுழற்சி அடிப்படையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது, கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் வழக்கமான பணிகளுடன் சோ்த்து கூடுதல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். முன்களப் பணியாளா்களாக கருதப்படும் இவா்களின் உடல்நலனை பேணும் வகையில் நாளொன்றுக்கு ஒரு முட்டை வழங்கும் வகையில் மாதம் 30 முட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். மைய அலுவலகத்தில் 650 பணியாளா்களுக்கு தலா 30 முட்டைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள பணியாளா்களுக்கு அந்தந்த கோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா்கள் மூலம் முட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், எம். பழனியாண்டி, ந. தியாகராஜன், முதன்மைப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.