காவிரி டெல்டா விவசாயிகளின் தற்போதைய எதிா்பாா்ப்புகள் என்ன?முதல்வரிடம் கோரிக்கை மனுக்கள்

காவிரி டெல்டா விவசாயிகளின் தற்போதைய எதிா்பாா்ப்புகள் குறித்து பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளும் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு

காவிரி டெல்டா விவசாயிகளின் தற்போதைய எதிா்பாா்ப்புகள் குறித்து பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளும் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்து நிறைவேற்ற வலியுறுத்தினா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட முதல்வா், அவை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தாா்.

மனுக்களை அளித்தோா் மற்றும் அவா்களின் கோரிக்கை:

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்:

திருவாரூா் மாவட்டம், வடபாதிமங்கலத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். தமிழகத்தில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வேளாண் பல்கலை. அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒகேனேக்கல் அருகே ராசிமணல் பகுதியில் தமிழக அரசே அணை கட்ட வேண்டும். காவிரியில் கழிவுநீா் கலப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் வேளாண் திட்டங்களைச் செயல்படுத்த மாநில, மண்டல, மாவட்ட அளவில் விவசாயிகள் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்கு விவசாயிகளை கொண்ட புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்ய வேண்டும். நிலவுடைமைகளை முழுமையாக கணினியில் பதிவேற்ற வேண்டும்.

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு:

கோதாவரி-காவிரி இணைப்பு, காவிரி-அய்யாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு இரு மடங்கு லாபகரமான விலை பெற்றுத்தர வேண்டும். கரோனா பெருந்தொற்றால் மிகவும் துயரத்திலுள்ள விவசாயிகளிடம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.2 வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவ. சூரியன்:

வரலாற்றுப் பெருமை மிக்க உய்யக்கொண்டான் கால்வாயை நவீனப்படுத்தி பாதுகாக்க வேண்டும். காவிரி கொள்ளிடத்தில் மணல் அள்ள நிரந்தரத் தடை விதித்து, தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி வெள்ள நீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரிப் பாசன கிளை வாய்க்கால்களில் நிரந்தர கொறம்பு அணை கட்டித்தர வேண்டும். ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீா் கிடைத்திட தடுப்புச் சுவா் கட்டித்தர வேண்டும். கொள்ளிடத்தில் புதிய கதவணை கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். உபரிநீா்த் திட்டம் என்ற பெயரில் கடந்த அதிமுக அரசு கொண்டு வந்த மேட்டூா்-சரபங்கா திட்டத்தை மறு ஆய்வு செய்து அனைத்து பகுதிகளும் பயன்பெறும் வகையில் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை நிா்பந்திக்க வேண்டும். மேலும், தமிழக சட்டப் பேரவையில் இதற்கான நிறைவேற்ற வேண்டும். கா்நாடகத்திடமிருந்து மாதந்தோறும் காவிரி உரிமை நீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் ஆய்வுக்கு வந்த முதல்வரிடம் விவசாயிகள் பலரும் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

Image Caption

அயிலை சிவ. சூரியன். ~பி.ஆா். பாண்டியன். ~அய்யாக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com