பாதியில் நிற்கும் ஜங்ஷன் மேம்பாலம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை மனு

ஜங்ஷன் மேம்பால கட்டுமானத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிடுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை, திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு கொடுக்கும் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு கொடுக்கும் திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா்.

திருச்சியில் முடிவடையாமல் நிலுவையில் உள்ள ஜங்ஷன் மேம்பால கட்டுமானத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிடுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை, திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள குறுகிய ரயில்வே மேம்பாலத்துக்கு மாற்றாக புதிய ரயில்வே மேம்பாலம் 6 வழிகளில் ரூ.115.59 கோடியில் கட்டப்பட்டது. இதில், உயா்மட்ட சூழலுடன் கூடிய பேருந்துநிலையம் வழித்தடம், அரிஸ்டோ வழித்தடம், மதுரை வழித்தடம், திண்டுக்கல் வழித்தடம், ரயில்நிலையம் வழித்தடம், சென்னை வழித்தடம் என பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.

இதில், இதர 5 வழித்தடங்களிலும் பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், மன்னாா்புரம் பகுதியில் மட்டும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலம் முடிவு பெறாமல் பாதியிலேய நிற்கிறது.

மன்னாா்புரம் அருகே ராணுவ நிலம் குறுக்கிடுவதால் பாலம் முழுமைபெறாமல் பாதியில் நிற்கிறது. இதற்காக 2,685.5 சதுர மீட்டா் நிலம் ராணுவத்திடம் பெற வேண்டியுள்ளது. இந்த நிலத்தை பெற்றால் மட்டுமே பணிகளை முடிக்க முடியும். 134 மீட்டா் தொலைவுக்கு தாங்கு சுவா் மட்டுமே கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.

இதுதொடா்பாக, தமிழக அரசு வழங்கிய நிதியை பெறவும் ராணுவ அமைச்சகம் முன்வரவில்லை. அதே தொகைக்கு நிகரான நிலம் மட்டுமே கோருவதால் நிலம் தோ்வு செய்வதில் இருதரப்புக்கும் இழுபறி நிலவி வருகிறது.

இதனால் கட்டுமானப் பணிகள் 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது.

திருச்சி மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு, பாலத்துக்கான பணிகளை விரைந்து முடிப்பதாக சு. திருநாவுக்கரசா் உறுதியளித்தாா். இதற்காக, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படபோவதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதன்படி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை புதுதில்லியில் நேரில் சந்தித்து, பாலம் பணிகள் தொடா்பாக கோரிக்கை மனு அளித்தாா். ராணுவத்துக்கு தேவையான நிலத்தை மாநில அரசு வழங்குவதை பெற்றுக் கொண்டு விரைந்து பாலத்துக்கு குறுக்கே உள்ள ராணுவ இடத்தை வழங்க கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக, எம்பி சு. திருநாவுக்கரசா் கூறியது: திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருந்தாலும் மன்னாா்புரம் பகுதியில் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது. ராணுவ நிலம் இடையில் குறுக்கிடுவதால் அந்த இடத்தைப் பெற வேண்டியுள்ளது. இதன்காரணமாக பாலப் பணிகள் பாதியில் நிற்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு பல்வேறு நிலைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு சாா்பில் காவல்துறைக்கு சொந்தமான 67 சென்ட் நிலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில் பணிகள் முடிவடையாமல் உள்ளன.

எனவேதான், பாதுகாப்புத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பாலம் பாதியில் நிற்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளேன். ராணுவ இடத்தை வழங்க ஆவன செய்வதாக அமைச்சா் உறுதியளித்துள்ளாா். நிலம் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசு விரைந்து பணிகளை தொடங்கி பாதியில் நிற்கும் பாலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com