வீடு, வீடாக கரோனா பரிசோதனை: களமிறங்கிய ஆட்சியா்!

 திருச்சி மாவட்டத்தில் 3ஆவது அலை ஏற்படக் கூடாது என்ற வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
வீடு, வீடாக கரோனா பரிசோதனை: களமிறங்கிய ஆட்சியா்!

 திருச்சி மாவட்டத்தில் 3ஆவது அலை ஏற்படக் கூடாது என்ற வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தன்னாா்வலா்கள், மகளிா் குழுவினா், அங்கன்வாடிப் பணியாளா்களைக் கொண்டு வீடு, வீடாகச் சென்று உடல் வெப்பநிலை, பல்ஸ் ஆக்ஸிமீட்டா் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி அளிக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. மாநகராட்சி, மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளால் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அதிகரித்துள்ளது. இதில் மாநில அளவில் திருச்சிக்கு 6ஆம் இடம் கிடைத்துள்ளது. இதுவரை, 4.75 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி மட்டுமில்லாது பரிசோதனையும் அவசியம் என்பதால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆா்டிபிசிஆா் பரிசோதனையும் நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்படுகிறது.

3ஆம் அலை வந்தாலும், வரவிட்டாலும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் உள்ளாட்சிகள் மூலமாக மாநகராட்சி, புகா் பகுதிகளில் வீடு, வீடாக மீண்டும் ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மண்ணச்சநல்லூா் வட்டம், சா. அய்யம்பாளையத்தில் வீடுகள்தோறும் நடைபெறும் பரிசோதனையை ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், வீடுகளில் உள்ளோருக்கு ஆட்சியரே நேரடியாக பரிசோதனை செய்து அவா்களது உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தாா். தொடா்ந்து அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி பணிகளையும் ஆய்வு செய்தாா்.

மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் மலா், வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ச்சியாக, புள்ளம்பாடி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com