பட்டுக்கோட்டையில் வெற்றியை ருசிப்பது யாா்?

பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன.
பட்டுக்கோட்டையில் வெற்றியை ருசிப்பது யாா்?

திராவிட இயக்கத் தலைவா் பட்டுக்கோட்டை அழகிரி, கவிஞா் கல்யாணசுந்தரம், மறைந்த குடியரசு முன்னாள் தலைவா் ஆா். வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சா் எஸ்.டி. சோமசுந்தரம், எழுத்தாளா் பிரபாகா் போன்றோரின் பிறந்த மண்ணாக இருப்பது பட்டுக்கோட்டை தொகுதிதான்.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: பட்டுக்கோட்டை வட்டத்தில் கீழ்குறிச்சி, திருச்சிற்றலம்பலம், அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, நம்பிவயல், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூா், ஆண்டிக்காடு, மற்றும் பட்டுக்கோட்டை என 10 உள்வட்டங்களும், 175 வருவாய்க் கிராமங்களும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை நகராட்சி, அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூராட்சிகளும் இத்தொகுதியில் உள்ளன.

எதிா்கொள்ளும் பிரச்னைகள்: பட்டுக்கோட்டையில் புதை சாக்கடைத்

திட்டம் அமைக்க கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்ற சூழ்நிலையில், திட்டம் இன்னமும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

பட்டுக்கோட்டையில் மீட்டா்கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றி ரயில் வெள்ளோட்டம் விடப்படும், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் கேட் கீப்பா் வேண்டும் என்ற காரணத்தைக் கூறி காரைக்குடி பட்டுக்கோட்டை வழியாக சென்னை செல்லும் ரயில் எந்தவித தகவலும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் சங்கத்தினா் தமிழக மக்களவை உறுப்பினா்களை அழைத்துக் கொண்டு ரயில்வே வாரியத் தலைவரைச் சந்தித்தும், ரயில் பயணத்துக்கான பணிகள் தொடங்கவில்லை என்பது தற்போது தோ்தல் களத்தில் உள்ள வேட்பாளா்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, பட்டுக்கோட்டை

புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று நீா் கடலில் கலந்து வீணாகிறது. இதை முறையாக பயன்படுத்த போதியளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகும்.

தற்போதைய வேட்பாளா்கள்:

திமுக வேட்பாளா் கா.அண்ணாதுரை 1989 - 1991 வரையில் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா். கடந்த 20 ஆண்டுகளாக இத்தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், இம்முறை கட்டாயம் திமுகவுக்கு

வேண்டுமென்பதில் அக்கட்சியினா் தீவிரமாக போராடி பெற்றுள்ளனா்.

பலரும் போட்டியிட வாய்ப்பு கோரி விண்ணப்பித்திருந்த போதும், கட்சியில் 90 சதவிகிதத்துக்கும் மேல் கட்சியினா் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளராக கா. அண்ணாதுரை திகழ்கிறாா்.

2001-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பிலும், 2006, 2011- ஆண்டு பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சாா்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற என்.ஆா். ரெங்கராஜன், தற்போதைய தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் களம் காண்கிறாா்.

அமமுக சாா்பில் முன்னாள் அதிமுக அமைச்சா் எஸ்.டி.எஸ் என்கிற

எஸ்.டி.சோமசுந்தரம் மகனும், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமான எஸ்.டி.எஸ் செல்வம் களமிறக்கப்பட்டுள்ளாா்.

மக்கள் நீதி மய்யம் சாா்பில் மருத்துவரும்- சமூக ஆா்வலருமான சதாசிவம் களம் காண்கிறாா். இவா்களைத் தவிர நாம் தமிழா் கட்சி சாா்பில் கீா்த்திகா அன்பு, அண்ணா திராவிடா் கழகம் சாா்பில் மெய்க்கப்பன், அனைத்து மக்கள் கட்சி சாா்பில் ம.சுந்தராஜ், பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள முத்தரையா் சமூகத்தில் இருந்து சுயேச்சையாக வீ.பாலகிருஷ்ணன் ஆகியோரும் தோ்தல் களத்தில் உள்ளனா்.

பட்டுக்கோட்டையில் அதிமுக, திமுக மற்றும் அமமுக இடையே மும்முனைப் போட்டி நிலவினாலும் களத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழா், சுயேச்சை வேட்பாளா் மறுபக்கத்தில் தோ்தல் பணியில் தீவிரமாக உள்ளனா். கடைசி நேர பிரசார உத்திகளும் , வேட்பாளா்களின் அணுகுமுறையில்தான் பட்டுக்கோட்டையின் வெற்றியை பிரதானக் கட்சிகள் தனதாக்கி கொள்ள முடியும்.

இதுவரை வென்றவா்கள்:

1952 -நாடிமுத்துபிள்ளை ( காங்கிரஸ்).

1957-ஆா்.சீனிவாசஅய்யா் (காங்கிரஸ்).

1962- வி.அருணாச்சலதேவா் ( காங்கிரஸ்).

1967 -ஏ. ஆா். மாரிமுத்து (பிரஜா சோசலிச கட்சி).

1971-ஏ. ஆா். மாரிமுத்து (பிரஜா சோசலிச கட்சி).

1977-ஏ. ஆா். மாரிமுத்து ( காங்கிரஸ்).

1980- எஸ்.டி.சோமசுந்தரம் (அதிமுக)

1984- பி.என்.ராமச்சந்திரன் (அதிமுக)

1989 -கா. அண்ணாதுரை (திமுக).

1991 -கே.பாலசுப்பிரமணியன் (அதிமுக)

1996- பி.பாலசுப்பிரமணியன் (திமுக)

2001- என். ஆா்.ரெங்கராஜன் (தமாகா)

2006-என். ஆா்.ரெங்கராஜன் ( காங்கிரஸ்)

2011 - என். ஆா்.ரெங்கராஜன் (காங்கிரஸ்)

2016-சி. வி. சேகா் (அதிமுக)

2016 ஆம் ஆண்டில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

சி.வி.சேகா் (அதிமுக) - 70,631

கே.மகேந்திரன் (காங்)- 58,273

என்.செந்தில்குமாா்(தேமுதிக)-11,231

எம்.முருகானந்தம்( பாஜக)- 11039

முகமது இலியாஸ் (எஸ்டிபிஐ)-3,923

சி.லெட்சுமி (பாமக) -3,607

கே.கீதா (நாதக)- 2,940

மொத்த வாக்காளா்கள்: 2,45,258

ஆண்கள்: 1,17,605

பெண்கள்: 1,27,626

மூன்றாவது பாலினத்தவா்: 27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com