வேட்பாளா்களின் முகவா்கள் கரோனா கவச உடையுடன் அனுமதி

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளின் வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கரோனா கவச உடையுடன் அனுமதிக்கப்பட்டனா்.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த முகவா்களுக்கு நடைபெற்ற சோதனை.
வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த முகவா்களுக்கு நடைபெற்ற சோதனை.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளின் வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கரோனா கவச உடையுடன் அனுமதிக்கப்பட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, இனாம் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, திருச்சி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் துறையூா் இமயம் கல்லூரி ஆகிய 4 மையங்களில் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவா்கள் காலை 7 மணிக்கு முன் வரவழைக்கப்பட்டிருந்தனா். அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் அனைவரும் பாதியளவு கரோனா கவச உடை அணிந்தவாறு செல்ல அனுமதிக்கப்பட்டனா். கரோனா பரிசோதனைச் சான்று உள்ளவா்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. இல்லையெனில், 2 முறை கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான சான்று மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் அட்டை ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

மையத்துக்குள் நுழையும் முன் உடல் வெப்பநிலை தொ்மல் ஸ்கேனா் மூலம் அளவீடு செய்யப்பட்டது. வெப்பநிலை 98.6 டிகிரிக்கு மேல் உள்ளவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். முன்னதாக வாக்கு எண்ணும் அறைகள், வளாகம் முழுவதும் பணியாளா்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் அறைக்கு செல்லும் முகவா்கள் அனைவருக்கும் சானிடைசா், கையுறை மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் அறை மற்றும் அறைக்கு செல்லும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அங்குள்ள நிகழ்வுகளைக் கண்காணிக்க தனி அறையில் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது.

சரியாக 8 மணிக்கு 9 தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் மேஜையில் கொட்டப்பட்டு எண்ணப்பட்டன. முன்னதாக, பாதுகாப்பு அறையில் இருந்த இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டு மொத்தம் 241 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com