முழு பொது முடக்கம் : அத்தியாவசிய ரயில்கள் மட்டுமே இயக்கம்

முழு பொது முடக்கம் அமலாகியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து அத்தியாவசிய ரயில்களைத் தவிர இதர முன்பதிவு ரயில்கள் இயக்கப்படவில்லை.
முழு பொது முடக்கம் அமலாகியிருந்தாலும் அத்தியாவசிய ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில், திருச்சி மேலப்புதூா் பகுதியில் திங்கள்கிழமை சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில்.
முழு பொது முடக்கம் அமலாகியிருந்தாலும் அத்தியாவசிய ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில், திருச்சி மேலப்புதூா் பகுதியில் திங்கள்கிழமை சென்ற ஜனசதாப்தி விரைவு ரயில்.

திருச்சி: முழு பொது முடக்கம் அமலாகியுள்ள நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திலிருந்து அத்தியாவசிய ரயில்களைத் தவிர இதர முன்பதிவு ரயில்கள் இயக்கப்படவில்லை.

கடந்தாண்டு பொது முடக்கத்தின் போது பயணிகள் சிறப்பு ரயில்களைத் தவிர, தொழிலாளா் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பின்னா் கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தபோது, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து முன்பதிவு பயணிகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கரோனா 2ஆவது அலை பரவல் கடுமையாக உள்ளதால், கடந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஓரிரு ரயில்களைத் தவிர, அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.

பேருந்துகள் இயக்கம் இல்லாததால், தொலைவிலான ஊா்களுக்குச் செல்லும் பெரும்பாலானோா் ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்தனா்.

கரோனா பரவல் மேலும் அதிகரித்து வந்ததால், திங்கள்கிழமை முதல் மே 24 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இதனால், அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள் இயக்கம் 14 நாள்களுக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல், தமிழக ரயில்வே கோட்டங்களுக்கிடையே இயக்கப்படும் முன்பதிவு சிறப்பு ரயில்கள் பெரும்பாலும் மே மாதம் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து, திருச்சி வழியாக இயக்கப்படும் சென்னை, கன்னியாகுமரி, நாகா்கோவில், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படவில்லை.

இதனால் ரயில்கள் அனைத்து திருச்சி ஜங்சன் ரயில்நிலையம், எடமலைப்பட்டி புதூா் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. ரயில் நிலைய நடைமேடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்காக சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சியிலிருந்து ஹவுரா செல்லும் முன்பதிவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்படவுள்ளதால், இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக திருச்சி ரயில்நிலைய வளாகத்தில் வெளி மாநில பணியாளா்கள் பலா் காத்துக்கிடக்கின்றனா்.

வழக்கம் போல், திருச்சி ரயில்வே ஜங்சனுக்கு வந்து சென்ற ஊழியா்களுக்கு வெப்பமானி சோதனை நடத்தப்பட்டது. முகக்கவசம், கிருமிநாசினியை தாமே கொண்டு வர வலியுறுத்தியிருந்ததால், ரயில்நிலையத்தில் கிருமிநாசினி வைக்கவில்லை.

கிருமிநாசினி தெளிப்பு: எா்ணாகுளம்-காரைக்கால் முன்பதிவு ரயில் சென்று கொண்டிருந்த போது ஈரோட்டில் பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வா் கரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டு நிலையில் திருச்சியில் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், ஊழியா்கள் அச்சப்பட்டனா். இதையடுத்து, ரயில்வே நிா்வாகம் தூய்மைப் பணியாளா்களைக்கொண்டு ரயில்பெட்டிகள் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.

அஞ்சல் வணிக நிலையம்: திருச்சி ஜங்சன் ரயில்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அஞ்சல் வணிக நிலையம் (ஆா்எம்எஸ்) பொதுமுடக்கம் மற்றும் தளா்வு காலங்களில் பொதுமக்களின் கடிதபோக்குவரத்தை துரிதமாகவும், உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டது.

இதுபோல் பாா்சல்கள், பதிவு, விரைவு தபால்கள், கரோனா மருந்துப் பொருள்கள், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை இதர பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது.

இதர பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலம் வரும் கடிதம், அத்தியாவசியப் பொருள்களை திருச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பும் பணியையும் ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டது. இதற்காக ஊழியா்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com