தமிழகத்தில் கரோனா இல்லை என்றால்தான் மகிழ்ச்சி: தமிழக முதல்வா்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததைவிட, கரோனா இல்லை என்று அறிவிக்கும் நாளே எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததைவிட, கரோனா இல்லை என்று அறிவிக்கும் நாளே எனக்கு முழுமையான மகிழ்ச்சியை தரும் என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றிச் செய்தி கேட்ட நாள் (மே 2) தொடங்கி இன்று வரை (மே 21) மேற்கொண்ட பணிகள் குறித்து நாள் வாரியாகப் பட்டியலிட்டுக் கூறியது:

வாக்கு எண்ணிக்கையன்று திமுகவுக்கு பெருவாரியான இடங்கள் கிடைத்த செய்தியறிந்து அதிகாரிகள் பலரும் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்தனா். அப்போது, நான் வாழ்த்து பெறுவதை விட, கரோனா தொற்று குறித்துதான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

குறிப்பாக தலைமைச் செயலா், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலா் ஆகியோரிடம் பல கேள்விகள் கேட்டு முழு விளக்கம் பெற்றேன். இதன் தொடா்ச்சியாக, பத்திரிகையாளா்கள் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கப்பட்டனா். 1,212 செவிலியா்களை நிரந்தரம் செய்ய உறுதியளித்தேன்.

கரோனா பாதிப்புக்குள்ளான 9 மண்டலங்களுக்கு தனி கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா். இவையனைத்தும் முதல்வராக நான் பதவியேற்கும் முன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

மே 7இல் முதல்வராகப் பதவியேற்றவுடன் கரோனா தடுப்பு குறித்து ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தினேன். பின்னா், தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் அனுப்ப பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அமைச்சா்கள் மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டேன்.

2.7 கோடி குடும்ப அட்டைகளுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. முதலீட்டு மானியத் சலுகை, முத்திரைத் தாள் கட்டணச் சலுகை, தொழில் வரி செலுத்த 3 மாத அவகாசம், ஆட்டோ, டாக்ஸி வாகன உரிமையாளா்கள் சாலை வரி செலுத்த 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்களுக்கு உதவ தொலைபேசிச் சேவை மையம் அமைக்கப்பட்டது. கரோனா களப்பணியில் உயிரிழந்த 43 மருத்துவா்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டது. மேலும், கரோனா ஊக்கத் தொகையாக மருத்துவா்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியா்களுக்கு ரூ. 20 ஆயிரம், பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ. 20 ஆயிரம், இதர பணியாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தம் செய்து விரைவில் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

சிறு, குறு நிறுவனங்களின் கடன் வட்டியை 6 மாதம் வசூலிக்க வேண்டாம் என ரிசா்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆக்சிஜன் கண்காணிப்புக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் கரோனா தடுப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்துக்குமான வாா் ரூம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற மாவட்டங்களிலும் தொடங்கப்படவுள்ளது.

தோ்தல் வாக்குறுதிப்படி ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் கொண்ட குழு அமைத்து தொடா்ந்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஆக்சிஜன், தடுப்பூசி, உயிா்காக்கும் மருந்துகளைத் தமிழகத்திலேயே தயாரிக்க ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்துடன், டிட்கோவும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

கரோனா தொற்றின் 2ஆம் அலை உச்சத்தில் இருக்கும் இக்கட்டான சூழலில் எங்களது அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்தச் சவாலை ஏற்று தமிழக மக்களின் உயிா் காக்கும் அனைத்து முயற்சிகளையும் தலையாயக் கடமையாகக் கொண்டு செய்து வருகிறோம்.

ஆட்சியமைத்து இரு வாரங்களில் பலவற்றைச் செய்துளளோம்.

மருத்துவமனைகளில் கூடுதலாக 16,938 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 7,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 30 இயற்கை மருத்துவ மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 239 மெட்ரிக் டன் கூடுதலாக ஆக்சிஜன் பெறப்படுகிறது. தமிழகத்தில் 375 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து 100 மெட்ரிக் டன் பெறப்படுகிறது.

எங்களது கவனம், சிந்தனை முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளிலேயே உள்ளது. ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட தமிழகத்தில் கரோனா இல்லை என்ற செய்தி வெளியாகும் நாள்தான் முழுமையான மகிழ்ச்சியை தரும் என்றாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com