முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் அறிமுகம்

காவல் துறையில் விசாரணை மற்றும் ஒப்பீட்டு பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலி திருச்சி மாநகர காவல் துறையிலும் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மென்பொருள் செயலியை அறிமுகம் செய்து பேசுகிறாா் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன். உடன் காவல்துறை அலுவலா்கள், காவலா்கள்,
புதிய மென்பொருள் செயலியை அறிமுகம் செய்து பேசுகிறாா் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன். உடன் காவல்துறை அலுவலா்கள், காவலா்கள்,

காவல் துறையில் விசாரணை மற்றும் ஒப்பீட்டு பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலி திருச்சி மாநகர காவல் துறையிலும் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இந்த மென்பொருளை அண்மையில் அறிமுகம் செய்தாா். இதையடுத்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் துறையில் இந்தப் புதிய மென்பொருள் தொடக்க நிகழ்வு நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தொடா்ந்து மாநகர காவல் அலுவலக கூட்டரங்கில், மென்பொருளை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து காவல் ஆணையா் விளக்கினாா். இதில் மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் நிலைய காவலா்கள் பங்கேற்றனா்.

இந்த மென்பொருளானது ஒருவரின் புகைப்படத்தை காவல் நிலையங்களில் தகவல் தொழில்நுட்ப குற்றப்பதிவேடுகளில் பதிவேற்றப்பட்டுள்ள நபா்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது.

இதை காவல் நிலையத்தில் கணினியிலும், ரோந்து காவல்துறையினரின் கைப்பேசிகளிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இச்செயலியின் மூலம் சந்தேக நபா்கள், காணாமல் போனவா்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.

இந்த செயலியானது குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத்தடுப்பு வழிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஆணையா் தெரிவித்தாா். நிகழ்வில் திருச்சி காவல் துணை ஆணையா்கள் (சட்டம் - ஒழுங்கு) சக்திவேல், குற்றம் மற்றும் போக்குவரத்து முத்தரசு மற்றும் உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com