முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்னா
By DIN | Published On : 11th October 2021 02:57 PM | Last Updated : 11th October 2021 04:17 PM | அ+அ அ- |

டாஸ்மாக் கடை முன்பு தர்னாவில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
திருச்சியில் குடியிருப்பு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையை திறக்கவிடாமல் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறை பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. 50 மீட்டர் இடைவெளியில் இந்த இரண்டு கடைகளும் அமைந்துள்ளன. இதில் கடை எண் 10311 குடியிருப்புக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. இதனால் இங்கு மது வாங்குவார்கள் சாலையின் ஓரத்தில் மது அருந்திவிட்டு அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும் அதேபோல் ஆபாச வார்த்தைகள் பேசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பெண்களும், சிறுவர்களும் அந்த பகுதியை கடக்க முடியாமல் அச்சத்துடன் இருப்பதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், இந்தப் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கண்டிப்பாக அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிக்க- 7 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடமாற்றம்
ஆனால் தற்போது வரை இந்த கடையை அகற்றாமல் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடை முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க வந்த ஊழியர்கள் வந்தபோது திறக்க விடாமல் கண்டன கோஷங்களை எழுப்பி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிழக்கு வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இந்த கடை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.