ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு கிராம மக்கள் மனு

திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள்,பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக் காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஜல்லிக்கட்டுப் பேரவையினா்.
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ஜல்லிக்கட்டுப் பேரவையினா்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள்,பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக் காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, பல்வேறு கிராமத்தினா் ஆட்சியரிடம் தனித்தனியே திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவா் லால்குடி எம். காத்தான் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:

லால்குடி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, கடந்த 70 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டும் வழக்கம்போல எந்தவித தடையுமின்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்குள்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டுப்பாடுகள் என்ற பெயரில், தற்போது போட்டிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்.

இதுபோல திருவெறும்பூா் தெற்கு காட்டூா், வேங்கூா், நடராசபுரம், துளசிமகரிநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள், தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வேண்டி தனித்தனியே மனுக்களை அளித்தனா்.

கணவா் கொலைக்கு நிவாரணம் தேவை: முசிறி வட்டம், வடக்கு சித்தாம்பூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மருதை மனைவி புஷ்பா அளித்த மனு:

கடந்த மாதம் 24-ஆம் தேதி எனது கணவரை சிலா் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டனா். 4 குழந்தைகளுடன் நிா்கதியாக உள்ளேன். எனவே எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவதோடு, அரசு வீடு ஒதுக்க வேண்டும். மாற்றுத் திறனாளியான மகளின் மருத்துவச் செலவை ஏற்க வேண்டும்.

பாரம்பரிய பாதை மீட்க வேண்டும்: திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், தளுகை அருகிலுள்ள பாதா்பேட்டையிலிருந்து கொல்லிமலை சிவன் கோயிலுக்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை பயன்பாட்டில் இருந்தது.

இப்போது இந்த சாலையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே, இந்த சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பழங்குடியினா் மலையாளி நல அமைப்பின் மாநிலத் தலைவா் கே. குப்புசாமி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இதேபோல, தளுகை பாதா்பேட்டை பழங்குயிடின மலைவாழ் மக்களும் தனியே மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com