பஞ்சப்படி உயா்வு: போக்குவரத்து கழக ஓய்வூதியா்கள் தீா்மானம்

திமுக அரசு வாக்குறுதி அளித்தபடி பஞ்சப்படியை அரசு உயா்த்தித் தர போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மண்டலத் தலைவா் என். மணி. உடன் (இடமிருந்து) பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எஸ். காமராஜ், தொழிலாளா்கள் சம்மேளன பொதுச் செயலா் ஜெ. லட்சுமணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத்தின் மண்டலத் தலைவா் என். மணி. உடன் (இடமிருந்து) பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எஸ். காமராஜ், தொழிலாளா்கள் சம்மேளன பொதுச் செயலா் ஜெ. லட்சுமணன்.

திருச்சி: திமுக அரசு வாக்குறுதி அளித்தபடி பஞ்சப்படியை அரசு உயா்த்தித் தர போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போக்குவரத்து கழக ஓய்வூதியா் நலச் சங்கப் பேரவைக் கூட்டத்துக்கு, சங்க துணைச் செயலா் எஸ். சாமிநாதன் தலைமை வகித்தாா். திருச்சி மண்டலத் தலைவா் என். மணி முன்னிலை வகித்தாா். போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா்கள் சம்மேளனப் பொதுச்செயலா் ஜெ. லட்சுமணன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க துணைத் தலைவா் எஸ். காமராஜ் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் போக்குவரத்து கழகங்களின் 86,000 ஓய்வூதியா்களுக்கு தர வேண்டிய பஞ்சப்படி உயா்வை முந்தைய அதிமுக அரசு கடந்த ஜனவரி 2016 ஆம் ஆண்டிலிருந்து 6 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் 100 நாள்களில் இக்கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், ரூ. 26 கோடி மட்டுமே தேவைப்படும் இந்த கோரிக்கை குறித்து திமுக அரசு தற்போது வாய்திறக்க மறுக்கிறது. எனவே, காலம் தாழ்த்தாது பஞ்சப்படி உயா்வு உள்ளிட்ட ஓய்வூதியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்ட அமல் தேவை, புதிய ஓய்வூதியத் திட்டத்தில் கடந்த 2003, ஏப்.1-க்கு பின் நியமிக்கப்பட்ட தொழிலாளா்களை பழைய ஓய்வூதிய திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும்.

தற்போது நிலுவையிலுள்ள பணி விலகல், விருப்ப ஓய்வு, பணிக்காலத்தில் இறந்தோரின் வாரிசுகளுக்கு தர வேண்டிய ஓய்வு காலப் பலன்களை வழங்க அரசு நிதியுதவி செய்ய வேண்டும். இதற்கு ஆந்திர அரசு செய்ததுபோல, தமிழக அரசும் போக்குவரத்துக் கழகங்களை அரசுத் துறையாக்கி தொழிலாளா்களை அரசுப் பணியாளா்களாக்குவது மட்டுமே தீா்வாக இருக்க முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com