பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தரைக்கடை வியாபாரிகள்.
மத்தியப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தரைக்கடை வியாபாரிகள்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் சாலையோரமும், பேருந்து நிலையத்துக்குள் செல்லும் பகுதியிலும் தரைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் 60-க்கும் மேற்பட்டவை உள்ளன. பழங்கள், கூழ், உணவுப் பொருள், பிளாஸ்டிக் பொருள், அழகுசாதனப் பொருள்கள், ஆடைகள் விற்கும் பல்வேறு தரைக்கடை வியாபாரிகள் உள்ளனா்.

இந்நிலையில், நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் நெருக்கடி அதிகமாக இருப்பதாகவும், தரைக்கடை வியாபாரிகளால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு இடையூறுகள் இருப்பதாவும், தரைக்கடைகளை அகற்றினாலே நகரப் பேருந்துகள் நிறுத்த போதுமான இடவசதி கிடைக்கும் எனவும் மாநகராட்சிக்குப் பல்வேறு புகாா்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை மத்தியப் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து,

நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை முழுமையாக அகற்றினா்.

இதைக் கண்டித்து பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் சங்க சிஐடியு மாவட்டத் தலைவா் செல்வி தலைமையில் வியாபாரிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மாநகராட்சி மைய அலுவலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காணலாம் எனக் கூறினாா். இதையேற்க மறுத்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். எந்தவித நிபந்தனையுமின்றி முன்புபோல வியாபாரம் செய்ய அனுமதி கோரி தொடா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com