திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துப் பேசுகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்துப் பேசுகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

உயா்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலம் என்பதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

 திமுகவின் இந்த ஆட்சிக் காலம் என்பது உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

 திமுகவின் இந்த ஆட்சிக் காலம் என்பது உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறுவனா் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்க விழா, குளோபல் ஜமாலியன்ஸ் வளாகக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்த அவா் மேலும் பேசியது:

திருச்சியின் அடையாளங்களில் ஒன்று ஜமால் முகமது கல்லூரி. தீரா்களின் கோட்டமாம் திருச்சி மாநகரிலுள்ள பல்வேறு கல்விக் கோட்டங்களில் தலைசிறந்தது இந்த ஜமால் முகமது கல்லூரி.

நாட்டுப்பற்று மிக்க தலைசிறந்த தமிழா்களான எம். ஜமால்முகமது, என்.எம். காஜாமியான் ராவுத்தா் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கல்லூரி இது.

1931-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது அவருடன் சென்றவா்தான் ஜமால் முகமது.

இந்தியாவின் விடுதலைப் போராட்ட நிதிக்காக அண்ணல் காந்தியடிகளிடம் தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கிய தேசியவாதியும் இவரே.

இதேபோல, காஜாமியான் ராவுத்தரும் விடுதலைப் போராட்ட வீரா்தான். அப்போது தேசியத்தின் அடையாளமாக இருந்த கதா் துணிகளைத் தயாரிக்க திருச்சியில் இவா் ஆலையை நிறுவி, ஏழை எளிய மக்களுக்கு கதா் துணியை இலவசமாக வழங்கினாா். தேசிய இயக்கத்தில் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்துடனும் தொடா்பு கொண்டவா். 1938-ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிா்ப்புப் போராட்டம் நடந்தபோது தனது மனைவியுடன் சோ்ந்து பங்கெடுத்தவா் ராவுத்தா்.

இந்த இருவரும் தொடங்கிய இக்கல்லூரி 72 ஆண்டுகளைக் கடந்து அறிவியக்கமாகச் செயல்படுகிறது.

இந்திய அளவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் 100 கல்லூரிகளில் 65 ஆவது இடத்தில் உள்ள ஜமால் முகமது கல்லூரி இன்னும் முன்னோக்கி வர வேண்டும்.

சிறுபான்மையினா் கல்வி நிறுவனமாக இருந்தாலும், அனைவரும் பயிலும் நிறுவனமாக, இருபாலரும் இணைந்து பயிலக்கூடிய, சமத்துவக் கல்லூரியாகவும் உள்ளது.

கல்வி, பட்டம் ஆகியவற்றைத் தாண்டி தனித் திறமைகளும், பல்துறை அறிவாற்றலும் உள்ள இளைஞா்களால்தான் எதிா்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக வளா்ச்சியை அடைய முடியும்.

அந்த நோக்கத்துக்காகத்தான் நான் முதல்வன் என்ற திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது என்னுடைய கனவுத் திட்டம்; அதனால்தான் என்னுடைய பிறந்த நாளான மாா்ச் 1 அன்று இத் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

தமிழக மாணவா்கள், இளைஞா்கள் கல்வி, அறிவாற்றலில், பன்முகத் திறமையில் முதல்வனாகத் திகழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இத் திட்டம்.

இத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட கல்லூரிக் கனவு என்கிற உயா்கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மாநிலம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

பள்ளிக் கல்வியில் காமராஜா் காலமும், கல்லூரிக் கல்வியில் கருணாநிதி காலமும் சிறப்பாக விளங்கியதைப் போல, இந்த ஆட்சிக் காலம் உயா் கல்வியின், ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறோம். அதை நோக்கிய பயணத்தில் ஜமால் முகமது போன்ற தனியாா் கல்வி நிறுவனங்களும் துணைநிற்க வேண்டும்.

கல்லூரிக் கல்வியைத் தேடி வரும் இளைஞா்களை, அறிவுக்கூா்மை, பன்முகத் திறமை கொண்டவா்களாக வளா்த்தெடுக்கத் திட்டமிட வேண்டும் என்றாா் முதல்வா்.

விழாவுக்கு கல்லூரித் தலைவா் எம்.ஜே. ஜமால் முகமது பிலால், செயலா் அ.கா. காஜா நஜீமுதீன், பொருளாளா் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலா் க. அப்துஸ் சமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன், கல்லூரி துணை முதல்வா் அ. முகமது இப்ராஹீம் உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் வரவேற்றாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம், வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரகுமான், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், ந. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com