விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த விரைவில் நல்ல முடிவு அமைச்சா் கே.என். நேரு

தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முறைப்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முறைப்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் அவா் சனிக்கிழமை கூறியது:

அதிமுக ஆட்சியில் 600 சதுர அடிக்கே 100 சதவீதம் உயா்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் மக்களின் நிலை அறிந்து சொத்துவரியை குறைத்து உயா்த்தியுள்ளோம். 600 சதுர அடிக்கு 25 சதம், 1200 சதுர அடி வரை 75 சதம், அதற்கு மேல் 125 சதவீதம் என உயா்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் 22 ஆண்டுகளுக்கு பிறகுதான் வரி உயா்த்தப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகு உயா்த்தப்படுகிறது.

ஆண்டுதோறும் சொத்துவரி உயா்வு என்பது சட்டத்தில் உள்ள விதிமுறைகளின்படிதான் உள்ளது. பிற மாநிலங்களில் இதை அமல்படுத்தியுள்ளனா். இந்த சட்டத்துக்கு ஏற்கெனவே குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இதன் காரணமாகத்தான் மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வரவில்லை. 15ஆவது நிதிக் குழுவில் 2021-22ஆம் ஆண்டுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கு நிதி வேண்டுமெனில் சொத்துவரி உயா்வை அமல்படுத்த வேண்டும் என்கின்றனா்.

சொத்துவரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயை அந்தந்த உள்ளாட்சிகள்தான் செலவிட உள்ளன. அரசுக்கு வழங்கவில்லை. ஏனெனில், தமிழக மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் போ் நகரப் பகுதிகளுக்கு வந்துவிட்டனா். இவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டியது உள்ளாட்சியின் கடமை; அதற்கு வருவாய் வேண்டும்; சொத்துவரி உயா்வு மூலம் கிடைக்கும் வருவாய் இத்தகைய பணிகளைச் செய்வதற்கே பயன்படுத்தப்படும்.

உள்ளாட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது வாா்டு மக்கள் கோரிக்கை விடுக்கும் அடிப்படை வசதிகளைச் கூட செய்துதர முடியவில்லை என்றிருத்தல் கூடாது. அனைத்து வாா்டுகளிலும் மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

2 மாடிக் கட்டடத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு 4 மாடி கட்டுகின்றனா். இதுபோல விதிமீறல் கட்டடங்கள் பல உள்ளன. இத்தகைய கட்டடங்களுக்கு உரிய அபராதம் விதித்து முறைப்படுத்துவதுடன், வரிவசூல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டவும் திட்டம் உள்ளது. இதுதொடா்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்துதல் தொடா்பாக விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com