திருச்சி விமான நிலையத்தில் ஓடுதள நீட்டிப்பு சாத்தியமில்லை?நிலம் கையகப்படுத்துவதில்தொடரும் சிக்கல்

திருச்சி விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்குத் தேவையான 512 ஏக்கா் நிலத்தில், ராணுவ நிலம் 120 ஏக்கா் உறுதியாகப் பெற்றுத் தரப்படும் என மக்களவை

திருச்சி விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்குத் தேவையான 512 ஏக்கா் நிலத்தில், ராணுவ நிலம் 120 ஏக்கா் உறுதியாகப் பெற்றுத் தரப்படும் என மக்களவை உறுப்பினா் கூறியுள்ள நிலையில், இதர நிலங்களைக் கையகப்படுத்துவதில் நிலவும் சிக்கலால் விரிவாக்கப் பணிகள் தற்போதைக்குச் சாத்தியமில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளம் தற்போது 8,136 அடியாக உள்ளது. சா்வதேச விமான நிலையமாகத் தரம் உயா்த்தப்பட்ட பின்னா், வெளிநாடுகளிலிருந்து பெரிய விமானங்கள் வந்து செல்ல ஓடுதளம் மேலும் நீளமாக்கப்பட என விமான நிலைய ஆணையம் கடந்த 2011 ஆம் ஆண்டு முடிவு செய்தது.

இதற்காக சுமாா் 512 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெறுகின்றன.

கையகப்படுத்த வேண்டிய நிலத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான நிலம், 200 ஏக்கா் உள்ளது. தவிர மாநில அரசு நிலங்கள், தனியாா் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள், நீா்நிலைகள் என 312 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

இவற்றில் மத்திய அரசு நிலங்களைத் தவிர தனியாா் நிலங்களை கையகப்படுத்துவதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடா்பாக விமான நிலைய ஆணையக் குழுமம், வருவாய்த் துறையினா் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதுவரை 40.93 ஏக்கா் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மீதி நிலங்களை கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக தனியாா் நிலத்துக்கு அரசு நிா்ணயித்துள்ள விலை கட்டுபடியாகவில்லை எனப் பலா் தெரிவித்துள்ளனா். மேலும் விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், பொதுநலச் சங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து, மாற்று இடங்கள் கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

தற்போது அமைக்கப்படும் விமான நிலைய புதிய முனையம் அடுத்தாண்டு ஜூன் மாதம் முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு முடிந்தால், கூடுதல் விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படலாம். ஓடுதள நீளம் குறைவாக இருந்தால் அந்த விமானங்கள் இங்கு வந்து செல்ல முடியாது. எனவே முக்கியத் தேவையாக உள்ள ஓடுதள விரிவாக்கம் என்பது நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விமான நிலைய நிா்வாகம் தரப்பிலும், மத்திய, மாநில அமைச்சா்கள் தரப்பிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 9 ஆண்டுகளாகக் கூறி வருகின்றனரே தவிர பணிகள் முற்றுபெறவில்லை.

இதுதொடா்பாக திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும், திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான மத்திய அரசு நிலங்களைக் கையகப்படுத்துவது தொடா்பாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று நிலம் தரும் பட்சத்தில் 120 ஏக்கா் நிலம் (ராணுவத்துக்கு சொந்தமான) வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசின் நிலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது உறுதியாகக் கிடைக்கும் என்றாா்.

ஆக மத்திய அரசு நிலம் 120 ஏக்கா், ஏற்கெனவே கையகப்படுத்தியது 41 ஏக்கா் என 161 ஏக்கா் நிலகத்தை கையகப்படுத்தவே சாத்தியங்கள் உள்ளன. எஞ்சிய நிலங்களை கையகப்படுத்துதல், ஓடுதளம் நீட்டிப்பு எப்போது என்ற கேள்விக்கு அதிகாரிகள் யாரிடமும் பதில் இல்லை.

எனவே, ஓடுதள விரிவாக்கம் என்பது உடனடியாகச் சாத்தியமில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com