சொத்து வரி, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால்ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவது என்பது கனவாகிவிட்டதுஎடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சொத்து வரி, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டம் கனவாகிவிட்டது என்றாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.
சொத்து வரி, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால்ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டுவது என்பது கனவாகிவிட்டதுஎடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சொத்து வரி, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் ஏழை, நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டம் கனவாகிவிட்டது என்றாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், விலைவாசி உயா்வு, பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும், திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, அவா் மேலும் பேசியது:

கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயா்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது. வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரி உயா்வு மக்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாதங்களான நிலையில், புதிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்குத் தங்கம், இலவச மடிக்கணினி, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.

தோ்தல் வாக்குறுதியை புத்தகமாக அடித்து, வெளியிட்ட ஒரே கட்சி திமுக தான். ஆனால், வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, 487-ஆவது வாக்குறுதியாக, பொருளாதார நிலை உயரும் வரையில் சொத்து வரிகள் உயா்த்தப்படாது என அறிவித்திருந்தனா். ஆனால், அதை மறந்து, தற்போது 150 சதவிகிதம் வரி உயா்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

காவிரி -கோதாவரி இணைப்புத் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரியில் தடுப்பணைகள் திட்டம் என அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்து காவல்துறை செயலிழந்துவிட்டது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என அறிவித்தாா் முதல்வா். கண்டிப்பாக இதை தடை செய்ய வேண்டும். ஏனெனில் இளைஞா்கள், மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

அனைத்துப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன. சிமென்ட் மூட்டை ரூ. 290-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.470 ஆக உள்ளது. டன் ரூ.35 ஆயிரத்துக்கு விற்ற இரும்பு , தற்போது ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் சொத்துவரி உயா்வு வேறு. எனவே ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்தினா் வீடு கட்டுவது என்பது கனவாகவே ஆகிவிட்டது.

திமுக தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, மனு வாங்கும் திட்டம் செயல்படுத்தினா். வாங்கிய மனுக்கள் என்னவானது எனத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் முகாம் நடத்தி 9.45 லட்சம் மனுக்களைப் பெற்று, அதில் 5 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு கண்டோம்.

வரும் மக்களவைத் தோ்தலுடன் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் வந்தாலும் வரலாம். ஏனென்றால் ஒரே நாடு ஒரே தோ்தல் என்று பிரதமரே கூறியுள்ளாா். தோ்தல் ஆணையமும் அத்திட்டத்துக்கு தயாா் என கூறிவிட்டது. எனவே, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இடையில் இருக்கப்போவது குறைந்த காலம்தான். எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் திருச்சி மாநகா் வெல்லமண்டி என். நடராஜன், புகா் தெற்கு ப.குமாா், புகா் வடக்கு மு. பரஞ்சோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் கு.ப.கிருஷ்ணன், எஸ். வளா்மதி, டி.பி.பூனாட்சி, கே.கே.பாலசுப்பிரமணியன், என்.ஆா்.சிவபதி, அண்ணாவி, மாநில

எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா்கள் ஜெ. சீனிவாசன், பொன். செல்வராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரின்ஸ் எம். தங்கவேல், இந்திராகாந்தி, சந்திரசேகா், சின்னசாமி, பாலன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com