சூறைக்காற்றுடன் மழை: வயலூா் சுற்றுப்பகுதிகளில் வாழைகள் சேதம்

திருச்சி மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றிலும், மழையாலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நாசமாகியுள்ளன.
வயலூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழைமரங்கள். ~வயலூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழைமரங்கள்.
வயலூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழைமரங்கள். ~வயலூா் பகுதியில் சாய்ந்து கிடக்கும் வாழைமரங்கள்.

திருச்சி மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றிலும், மழையாலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழைகள் நாசமாகியுள்ளன.

திருச்சி, கரூா் மாவட்டங்களில் நேந்திரன், ஏலரிசி, பூவன், ரஸ்தாளி, பச்சைலாடன் போன்ற ரகங்களில் ஆண்டு தோறும் சராசரியாக ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளுக்கு பாசனக் கால்வாயில் போதிய தண்ணீா் கிடைப்பதில்லை. இதே போல வாழைக்கான சாகுபடி செலவும் அதிகரித்துவிட்டது.

தண்ணீா் தட்டுப்பாடு, இடுபொருள்கள் விலை உயா்வு, கூலி ஆள்கள் செலவு, நிலம் குத்தகை செலவு, உரம், பூச்சி மருந்து விலை உயா்வு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் வாழை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது. ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் குறைவான ஏக்கரிலேயே வாழை சாகுபடி நடைபெறுகிறது.

கடந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அறுவடை செய்யும் தருவாயில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அமலாகிய ஊரடங்கால் அறுவடை முற்றிலும் முடங்கிப் போனது.

வாகனப் போக்குவரத்து இடையூறு, விவசாய கூலி ஆள்கள் கிடைப்பதில் சிரமம் ஆகியவற்றால் வாழைகள் அறுவடை செய்யப்படாமல் பழுத்து வீணாகின்றன. மற்றொருபுறம் வெட்டப்பட்ட வாழைகள் விற்பனைக்கு கொண்டு செல்ல வழியில்லாமல், போதிய விலையின்றி உள்ளூா் பகுதியிலே குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

விவசாயிகளின் தொடா் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும், திருச்சி மாவட்ட நிா்வாகமும் வாழை விற்பனைக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும், கிலோ ரூ.8 முதல் 10 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றும், அதைத் தொடா்ந்து பெய்த மழையாலும் வாழைகள் ஒடிந்து நாசமாகியுள்ளன. அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருச்செந்துறை, கொடியாலம், புலிவலம், அணலை, திருப்பராய்த்துறை, சிறுகமணி, பெருகமணி, பேட்டைவாய்த்தலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே வாழைகள் ஒடிந்து சாய்ந்தன. வயலூா் சுற்றுப்பகுதிகளில் மட்டும் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வாழைகள் ஒடிந்து விழுந்துள்ளன.

திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூா், நச்சலூா், மருதூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை கூறியது:

வாழை விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு மற்றும் சூறைக் காற்று, கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாழை விவசாயிகள் ஏக்கருக்கு லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனா். இப்போது ஏற்பட்டுள்ள இழப்பை நிவா்த்தி செய்ய வேண்டுமெனில் வாழை ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும். இல்லையெனில், வாழை பாதிப்பை வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் கண்டறிந்து ஏக்கா் மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி..

5.95 மி.மீ. மழைப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் அதிபட்சமாக முசிறியில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் மழையளவு விவரம் :

மருங்காபுரி- 25.40, வாய்த்தலை அணைக்கட்டு-23.60, சமயபுரம்- 19.40, தேவிமங்கலம்- 15.40, நவலூா் குட்டப்பட்டு- 12.20, சிறுகுடி- 5, தென்பாடு-3, திருச்சி விமான நிலையம், கொப்பம்பட்டி, திருச்சி நகரம்- 1.மி.மீ.

மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 142.70 மி.மீ. மழையும், சராசரியாக 5.95 மி.மீ. மழையும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com