டாம்கோ, டாப்செட்கோ சாா்பில் ஆக.16 முதல் சிறப்புக் கடன் மேளா 7 வட்டங்களில் நடைபெறுகிறது

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களில் கடன் வழங்கும் வகையில் 7 வட்டங்களில் ஆக.16 முதல் சிறப்புக் கடன் மேளா நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களில் கடன் வழங்கும் வகையில் 7 வட்டங்களில் ஆக.16 முதல் சிறப்புக் கடன் மேளா நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ), தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) சாா்பில் தனிநபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கறவை மாடு கடன் திட்டம், ஆட்டோ கடன் திட்டம், விவசாயிகளுக்கான நீா்ப்பாசனக் கடன் திட்டங்களுக்கு சிறப்புக் கடன் வழங்கும் மேளா நடத்தப்படவுள்ளது.

இதன்படி வரும் ஆக.16 ஆம் தேதி வரகனேரி நகர கூட்டுறவு வங்கியில் திருச்சி கிழக்கு வட்டத்துக்கும், திருச்சி மேற்கு வட்டத்துக்கு வரும் 17ஆம் தேதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கருமண்டபம் கிளையிலும், மணப்பாறை வட்டத்தினருக்கு ஆக.18ஆம் தேதி புத்தாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மருங்காபுரி வட்டத்தினருக்கு ஆக.19ஆம் தேதி துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்திலும் முகாம் நடைபெறும்.

மேலும், லால்குடி வட்டத்துக்கு புள்ளம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக் கிளையில் வரும் 24ஆம் தேதியும், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்கு மண்ணச்சநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 25ஆம் தேதியும், ஸ்ரீரங்கம் வட்டத்தினருக்கு ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கியில் 26ஆம் தேதியும் முகாம் நடைபெறும்.

கடன் பெற விரும்புவோா் 18 வயது முடிந்து 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். புதிய தொழில், ஏற்கெனவே தொழில் செய்யும் நிலையில் விரிவாக்கம் செய்யவும் கடன் பெறலாம். ஆதாா் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, தொழில் விவரம் மற்றும் இதர ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி அலுவலா்களை நேரில் அணுகலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com