தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு: ஆசிரியா் கூட்டமைப்பினா் பிரசார இயக்கம்
By DIN | Published On : 11th December 2022 12:11 AM | Last Updated : 11th December 2022 12:11 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை பிரசார இயக்கத்தில் ஈடுபட்ட இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு மாவட்டத் தலைவா் நீதி நாயகம் தலைமை வகித்தாா். இதில், பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், இடைநிலை ஆசிரியா் சங்க மாநிலத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கற்று உரையாற்றினா்.
இதில், ஏழை, எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பு, 69 சதவீத இடஒதுக்கீடு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயா்கல்வி நிறுவனமாக குறைக்கப்படும் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி, நிறைவில் குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளதாக் ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
பிரசார இயக்கத்தில், மாவட்ட செயலாளா் ஆரோக்கியராஜ், அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் பழனிசாமி மற்றும் திரளான ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
நிறைவில், தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக செயற்குழு உறுப்பினா் சிற்றரசு நன்றி கூறினாா்.