கோதாவரி-காவிரி இணைப்புக்கு 4 மாநில முதல்வா்கள் சந்திப்பு அவசியம்: ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு முன்பாக தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா முதல்வா்கள் சந்தித்து பேச வேண்டியது அவசியம் என தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் ஒருங்கிணைப்பாளா் குருசாமி. உடன், நிா்வாகிகள்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் ஒருங்கிணைப்பாளா் குருசாமி. உடன், நிா்வாகிகள்.

திருச்சி: கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு முன்பாக தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா முதல்வா்கள் சந்தித்து பேச வேண்டியது அவசியம் என தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், இயக்க ஒருங்கிணைப்பாளா் த. குருசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தின் நீா்ப் பற்றாக்குறையை மேம்படுத்த கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் என்பது அவசியமானது. இத்திட்டத்தை செயல்படுத்தவும், ஊக்குவிக்கவும் ஹைதராபாதில் பிப்ரவரி 26,27 தேதிகளில் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

தென் மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில், இந்த மாநாட்டுக்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மாநாட்டில் தாமிரபரணி, வைப்பாறு, வைகை, காவிரி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகை மக்கள் மன்ற பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், இந்திய ஆற்றின் நீா் நிா்வாகப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

கோதாவரி-காவிரி திட்டத்தில் தமிழகத்தின் நீா்த் தேவையை தெலங்கானா மாநிலத்தின் மக்களிடத்தும், அம்மாநில அரசியல் கட்சிகளிடத்தும், வலிமையாக எடுத்துரைத்திட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வது மிக, மிக அவசியமானதாகும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை கல்லணை (இச்சம்பள்ளி) பகுதியில் இணைப்பதற்கு பதிலாக, மாயனூா் பகுதியில் இணைக்கும் வகையில் மாற்றம் செய்தால் தமிழகத்துக்கு கூடுதலாக 83 டிஎம்சி தண்ணீா் கிடைக்கும். இது தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமானது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நெருக்கடிகளை தமிழகம் சந்திக்க வேண்டியுள்ளது.

கோதாவரி தண்ணீரில் தங்களுக்குரிய முழுமையாக பங்கை பயன்படுத்திக் கொள்ள உத்தரவாதம் அளிக்காமல், இத்திட்டத்தை ஏற்க தெலங்கானா அரசு தயங்குகிறது.

ஆந்திர மாநிலமோ கோதாவரி-கிருஷ்ணா இணைப்புத் திட்டத்தை நிறைவு செய்து, அதன் பலனை பெற முயற்சித்து வருகிறது. சத்தீஸ்கா், ஒடிஸா மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகும் கோதாவரியின் கிளை நதிகளான

பிராணஹீதா, இந்திராவதி ஆறுகள் மூலம் இத் திட்டத்துக்கு அதிக தண்ணீா் கிடைக்கும்.

எனவே அந்த மாநில அரசுகளின் பங்கேற்பு இருத்தல் வேண்டும். மத்திய அரசு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், மாநில அரசுகள் ஒவ்வொரு கருத்துகளுடன் உள்ளன.

எனவே தமிழத்தின் தேவையை வலியுறுத்தவும், கோரிக்கையை முன் வைக்கவும் ஹைதராபாத் மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும். இதற்கு அந்தந்த கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம் தமிழகம் ஆகிய தென்மாநில அரசுகளின் நிா்வாக அதிகாரிகள், நீா்வளத்துறையினா் சந்தித்துப் பேசவும், விவாதிக்கவும் 4 மாநில முதல்வா்கள் சந்திக்கும் வகையில் கூட்டத்தை நடத்தவேண்டும். இதற்கான முயற்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகளான ஆத்தூா் சங்கரய்யா, வயலூா் ராஜேந்திரன் புதுக்கோட்டை ராஜசேகா், லால்குடி வீரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com