முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு
By DIN | Published On : 03rd May 2022 04:47 AM | Last Updated : 03rd May 2022 04:47 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை மையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்கின்றனா். இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ராஜகோபுரம் அருகில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இந்த மையத்தை மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா். இரு மருத்துவா்கள், இரு செவிலியா்கள் உள்ளிட்ட 6 போ் இம்மையத்தில் பணியில் இருப்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் ஆட்சியா் சு. சிவராசு, மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன், இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் கல்யாணி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.