ஒரு வாரத்தில் 265 கஞ்சா வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை

 மத்திய மண்டலத்தில் ஒரு வாரத்தில் 265 கஞ்சா வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 மத்திய மண்டலத்தில் ஒரு வாரத்தில் 265 கஞ்சா வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த மே 3 முதல் 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள கஞ்சா வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிப்பதற்கும், நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணையைத் தொடங்குவதற்கும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டோா் மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்த 2 வழக்குகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மண்டலத்தில் மே 3 ஆம் தேதி புலன் விசாரணையில் இருந்த 699 கஞ்சா வழக்குகளில் ஒரு வாரத்திற்குள் 262 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தஞ்சாவூா் மாவட்டத்தில் 66 கஞ்சா வழக்குகளிலும், கரூா் மாவட்டத்தில் 45 கஞ்சா வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படாமல் இருந்த 27 கஞ்சா வழக்குகளில் கடந்த ஒரு வாரத்தில் நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில் ஒரு வழக்கும், திருவாரூா் மாவட்டத்தில் ஒரு வழக்கும் தண்டனையில் முடிந்துள்ளது. நிலுவை வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துரிதமாகத் தொடங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களும் தங்களது மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள கஞ்சா வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

கஞ்சா வழக்குகளில் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்படுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை விரைவாக தொடங்கப்படுவதையும் திருச்சி மற்றும் தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா்கள் தினமும் கண்காணித்து வருகின்றனா்.

மத்திய மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதையும், விற்பதையும் முற்றிலுமாக ஒழித்திட தொடா் சோதனைகள் நடத்த அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களும்க்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்தி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனைப் பெற்றுத் தர தேவையான நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com