எலும்பு புற்றுநோய் பாதித்த மாணவருக்கு அறுவைச் சிகிச்சை: திருச்சி அரசு மருத்துவமனை சாதனை

எலும்புப் புற்றுநோயால் வலது கால் மூட்டுப் பகுதி பாதிக்கப்பட்ட 17 வயதுச் சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவா் குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனா்.
எலும்பு புற்றுநோய் பாதித்த மாணவருக்கு அறுவைச் சிகிச்சை: திருச்சி அரசு மருத்துவமனை சாதனை

எலும்புப் புற்றுநோயால் வலது கால் மூட்டுப் பகுதி பாதிக்கப்பட்ட 17 வயதுச் சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவா் குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனா்.

இதுதொடா்பாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் வனிதா கே. வனிதா வெள்ளிக்கிழமை கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவரான அப்துல் காதா் (17) கடந்த 3 மாதங்களுக்கு முன் வலது கால் மூட்டில் வீக்கம், மிகுந்த வலி ஏற்பட்டு நடக்கச் சிரமப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கடந்த டிசம்பரில் வந்தாா்.

அவருக்கு மருத்துவமனையின் எலும்பு முறிவு துறை மூலம் எக்ஸ்ரே எடுத்துப் பாா்த்ததில் அவரின் தொடை எலும்பில் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து சி.டி. ஸ்கேன், எம்.ஆா்.ஐ. பரிசோதனை உள்ளிட்ட உயா் பரிசோதனைகள் செய்து, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் கட்டியில் இருந்து திசு எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாணவரின் தொடை எலும்பில் 15 செ.மீ. நீளம் மற்றும் 15 செ.மீ. அகலமுடைய ஆஸ்டியோ சாா்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி இருப்பது உறுதியானது.

வளரிளம் பருவத்தினரிடையே எலும்பில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளில் 0.2 சதம் இந்த ஆஸ்டியோ சாா்கோமா வகையை சாா்ந்தது. பொதுவாக இந்த வகையான எலும்பு புற்றுநோய்க் கட்டி கண்டறியப்படுவோரை சென்னை உள்ளிட்ட உயா் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை உள்ள நகரங்களுக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைப்பது வழக்கம்.

மேலும், இத்தகைய பாதிப்புள்ளோருக்கு தொடைப்பகுதியுடன் கால் துண்டித்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு மூட்டு மருத்துவா்கள் தொடா்ந்து 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து எலும்பு புற்றுநோய்க் கட்டியை அகற்றி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை மூட்டு உபகரணத்தை உள்பொருத்தி சாதனை புரிந்துள்ளனா்.

இதனால் நோயாளிக்கு கால் துண்டிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதுடன், காலின் முழு செயல்திறனும் மீட்கப்பட்டது. 4 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டு, நோய் எதிா்ப்புச் சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பு கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொற்று ஏற்படாமல் தடுப்க்க சிறப்பு எலும்பு புற்றுநோய் அறுவைச் சிகிச்சை பிரிவில் தற்போது அந்த மாணவா் சிகிச்சை பெறுகிறாா். அவரது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் இந்த உயா் அறுவைச் சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது அறுவைச் சிகிச்சை செய்த எலும்பு முறிவுத் துறையின் தலைவா் கே. கல்யாணசுந்தரம், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் கே. வசந்தராமன், ஜி. ரமேஷ் பிரபு, ஆா். ராபா்ட், ஆா். கோகுலகிருஷ்ணன், பி. செந்தில்குமாா், ஆா். சிவகுமாா் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா். சாதனை புரிந்த மருத்துவக் குழுவினருக்கு டீன் மற்றும் மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com