திருச்சி சிறப்பு முகாமில் கணவர் முருகனை சந்தித்து நளினி நலம் விசாரிப்பு
By DIN | Published On : 14th November 2022 01:30 PM | Last Updated : 14th November 2022 01:37 PM | அ+அ அ- |

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை நேரில் சந்தித்த நளினி, கண்ணீர் மல்க அவரிடம் நலம் விசாரித்தார்.
அப்போது, அவரது கணவர் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முகாமிற்கு நேரடியாக வருகை தந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய நளினி, 'தனது மகள் லண்டனில் வசித்து வருவதாகவும், எனது கணவர் முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சியர், உங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மனுவாக தரும்படி கூறியுள்ளார்.
இதையும் படிக்க- அசாமில் ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு!
அதையடுத்து, நளினி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிறைவாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, "சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் சந்தித்து பேச உள்ளதாகவும், சிறப்பு முகாமில் முருகன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து எனக்கு தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சக முகாம்வாசிகளுடன் சந்தித்து பேச தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை சந்தித்து பேச திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று சிறப்பு முகாமிற்குள் சென்றார். அவர்களுடன் பேசிய பின்பு அங்கிருந்து புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் மற்ற முகாம்வாசிகளுக்கு உள்ளது போல் செய்து தரப்பட்டு உள்ளது. அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல, அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முருகன் உள்ளிட்ட நால்வரும், தாங்கள் காலை, மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ள சிறை வளாகத்தில் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் இவ்வாறு ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார். திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. அவர்கள், நடைபயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட சில வசதிகளை கேட்டனர். அவை உடனுக்குடன் செய்து தரப்பட்டுள்ளது. நால்வரில் மூன்று பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களை இலங்கை நாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்டுள்ளோம். முருகனுக்கு இங்கே வழக்கு இருப்பதால் அவர் தற்போது செல்வதற்கு வாய்ப்பில்லை.