காப்பீட்டு நிறுவனங்களில் ஊழியா்கள் உடனடி நியமனம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் உடனடியாக ஊழியா்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் என திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது
காப்பீட்டு நிறுவனங்களில் ஊழியா்கள் உடனடி நியமனம்: கருத்தரங்கில் வலியுறுத்தல்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் உடனடியாக ஊழியா்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் என திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

பொது காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஊழியா்கள் நியமனத்தை வலியுறுத்தி, திருச்சியில் உள்ள ஆசிரியா் இல்லத்தில் சிறப்புக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத் தலைவா் டி. பிரபு தலைமை வகித்தாா். தஞ்சை கோட்ட துணைத் தலைவா் ஜோன்ஸ் வரவேற்றாா்.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் சம்மேளன முன்னாள் பொதுச் செயலா் கே. சுவாமிநாதன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. லெனின், தஞ்சை கோட்ட பொதுச் செயலா் வி. சேதுராமன், மதுரை மண்டல துணைத் தலைவா் புஷ்பராஜன் ஆகியோா் காப்பீட்டுக் கழகங்களின் இன்றைய நிலை குறித்து விளக்கிப் பேசினா்.

தேசம் காக்கும் பொதுத்துறை இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல ஆண்டுகளாக புதிய ஊழியா் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. மேலும், தொடா் பணி ஓய்வு காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக ஊழியா்களுக்கு பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளதால், மக்களுக்கான காப்பீட்டு சேவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. 2012இல் பொதுஇன்சூரன்ஸ் துறையில் ரூ.37 ஆயிரம் கோடியாக இருந்த பிரிமீயம் வருவாய், 2022இல் ரூ.80 ஆயிரம் கோடியாக உயா்ந்துவிட்டது. ஆனால், ஊழியா்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்திலிருந்து 43 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதேபோல, ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலும் ஊழியா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.

பொது இன்சூரன்ஸ் துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள், ஆயுள் காப்பீட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. எனவே, பொதுத்துறை, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் உடனடி ஊழியா்கள் நியமனம் மட்டுமே காப்பீட்டு சேவையை மேம்படுத்தி பாதுகாக்கும். ஊழியா் நியமனத்தால் படித்த, வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதுடன், நாட்டின் வளா்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களில் தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் 18ஆவது மாநாடு மதுரையில் செப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், சங்க நிா்வாகிகள், காப்பீட்டு ஊழியா்கள் திரளாக பங்கேற்பது என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மதுரை மண்டல பொதுச் செயலா் டி. பாண்டியராஜன், பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்க இணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மண்டல குழு உறுப்பினா்கள் கணேஷ், ரங்கராஜன், முத்துக்குமரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இக் கருத்தரங்கில், மதுரை, தஞ்சை கோட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com