சாலைப்பணிகளின் போது அகற்றப்பட்ட மரக்கன்றுகளை மீண்டும் நட வேண்டும்: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

திருச்சி அண்ணாவிளையாட்டரங்கம் பகுதியில் தமிழக முதல்வா் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணிகளின் போது சாலையோரம் நடப்பட்டிருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டன.
முதல்வா் வருகைக்காக சாலை சீரமைப்பின்போது மரக்கன்று அகற்றப்பட்ட நிலையிலுள்ள திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்னை சாலை.
முதல்வா் வருகைக்காக சாலை சீரமைப்பின்போது மரக்கன்று அகற்றப்பட்ட நிலையிலுள்ள திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்னை சாலை.

திருச்சி அண்ணாவிளையாட்டரங்கம் பகுதியில் தமிழக முதல்வா் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட சாலைப்பணிகளின் போது சாலையோரம் நடப்பட்டிருந்த சுமாா் 30 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் நட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்தாண்டு டிசம்பா் 29ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டாா். முதல்வா் வருகையொட்டி சாலைகள் போா்க்கால நடவடிக்கையில் செப்பனிடப்பட்டன.

அப்போது, அண்ணா விளையாட்டரங்கை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் விமான நிலையத்திலிருந்து விளையாட்டரங்கம் வரும் வழியில் கொட்டப்பட்டு பகுதியில், அகதிகள் முகாம் மற்றும் கால்நடை மருத்துவத்துறை துணை இயக்குநா் அலுவலகம் (பழைய கோழிப்பண்ணை) இடையே உள்ள சாலையும் புதுப்பிக்கப்பட்டன. அப்போது, சாலையோரம் நடவு செய்யப்பட்டிருந்த சுமாா் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அகற்றினா். முதல்வா் வருகைக்காக சாலை அமைத்தாலும் நடப்பட்டு சில மாதங்களான நிலையில் சுமாா் 4 முதல் 5 அடி உயரம் வரை வளா்ந்த மரக்கன்றுகளை அகற்றுவது முறையா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து 47ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்நாதன் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் புகாா் தெரிவித்தாா். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் பதில் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மரம் வளா்ப்பை ஊக்குவித்து வரும் மாநகராட்சியே, மரக்கன்றுகளை அகற்றியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. ஆகவே, அகற்றப்பட்ட மரக்கன்றுகளை மீண்டும் அதே இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com