திருச்சி மாநகரில் பழைய மழைநீா் வடிகால்கான்கிரீட் பலகைகளை சீரமைக்கக் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி சுமாா் 400 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் வாய்க்காலில் கான்கிரீட் பலகை போடும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், பழைய மழைநீா் வடிகால் கான்கிரீட் பலகைகளையும் சீரமைக

திருச்சி மாநகராட்சி சுமாா் 400 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் வாய்க்காலில் கான்கிரீட் பலகை போடும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், பழைய மழைநீா் வடிகால் கான்கிரீட் பலகைகளையும் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில், மழைநீா் வடிகால்களில் கான்கிரீட் பலகை போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மேயா் மு. அன்பழகன் மாநகராட்சிக் கூட்டங்களில் பேசுகையில் மழைநீா் வடிகால் வாய்க்கால்களில் அதிகளவில் சிலா் குப்பைகளைக் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதால், அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனால் குடியிருப்புகளிலும், சாலைகளிலும் கழிவு நீா் பெருக்கெடுத்தோடுகிறது.

மேலும் மழைக் காலங்களில் மழை நீா் வடிய முடியாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே மாநகருக்குள் செல்லும் மழை நீா் வடிகால் வாய்க்கால்களில் சுமாா் 400 நீளத்துக்கு, கான்கிரீட் பலகை போட்டு மூடப்படவுள்ளது. இதனால் வாய்க்கால்களில் யாரும் குப்பைகளைப் போட முடியாது, அடைப்புகளும் ஏற்படாது எனக் குறிப்பிட்டிருந்தாா்.

‘சேதமடைந்த பலகைகளை முதலில் சீரமைக்க வேண்டும்’

இந்நிலையில் இதுதொடா்பான பணிகள் தற்போது தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூறியது:

திருச்சி மாநகராட்சியில் சுமாா் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதேபோல மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் கான்கிரீட் பலகைகளால் மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான வடிகால் வாய்க்கால்களின் மீது உள்ள பலகைகள் பாதசாரிகள் நடந்துசெல்லும் வகையிலும், வீடுகள் மற்றும், வணிக நிறுவனங்களுக்கு செல்லும் வழியாகவும் பயன்படுகிறது. இதில் பல பகுதிகளில் தற்போது கான்கிரீட் பலகைகள் உடைந்து சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

இரவு நேரங்களில் சிலா் அவற்றில் விழுந்தும் காயமடைந்த சம்பவங்களும் உண்டு. எனவே, புதிதாக கான்கிரீட் பலகைகள் அமைக்கும் முன் ஏற்கெனவே சேதமடைந்த பலகைகளுக்குப் பதிலாக புதிய பலகை அமைக்க வேண்டும் வேண்டும் என்றனா்.

அமைச்சா் தினசரி செல்லும் வழியில்..

திருச்சி தில்லைநகா் சாஸ்திரி சாலையில் அமைச்சா் கே.என். நேரு தினசரி சென்று வரும் பாதையில் சாலையின் இரு பகுதியிலும் உள்ள மழை நீா் வடிகால் வாய்க்காலின் பலகைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் பயனில்லை.

மகாத்மா காந்தி பள்ளி அருகே பல லட்சத்தில் புதிதாக மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு அதற்கு பலகை போட்டுள்ள நிலையில், அதன் அருகில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்துள்ள, வாய்க்கால்களில் பலகைகள் போடவில்லை, அவை தூா் வாரி சீராக்கப்படவும் இல்லை. அவற்றை பொதுமக்களை தற்காலிகமாக மரம் மற்றும் தகரங்களால் மூடியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com