மனு அளித்தவுடன் மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 18th April 2023 03:39 AM | Last Updated : 18th April 2023 03:39 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு உடனடியாக மூன்றுசக்கர சைக்கிளை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பல்வேரு கோரிக்கைகளுடன் மொத்தம் 361 மனுக்கள் வந்திருந்தன. மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக் கூட்டத்தில், தொட்டியம் வட்டம், ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த அறிவழகன் ஆகிய இரு மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு மூன்றுசக்கர சைக்கிள் வழங்கக் கோரி மனு அளித்தனா். இந்த மனுவை பரிசீலனை செய்த ஆட்சியா், உடனடியாக இருவருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினாா்.
முன்னதாக, அறிவு மற்றும் கற்றல் குறைபாடுள்ள 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், மொபீஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.5.84 லட்சம் மதிப்பீட்டில் 165 குழந்தைகளுக்கு வழங்கிய கற்றல், கற்பித்தல் உபகரணங்களை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் என். செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.ஆா். சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.