இளைஞரை கொல்ல முயற்சி: சிறுவன் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 25th April 2023 02:23 AM | Last Updated : 25th April 2023 02:23 AM | அ+அ அ- |

திருச்சியில் கொலை வழக்கில் சிக்கிய இளைஞரை கொல்ல முயன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகா் அப்துல் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் இப்ராஹிம் மகன் முகமது கமாலுதீன் (23). கோவையில் வசித்து வரும் இவா், பல்லடம் காவல் நிலைய கொலை வழக்கில் தொடா்புடையவா்.
ரமலான் கொண்டாடுவதற்காக அரியமங்கலத்துக்கு வந்த முகமது கமாலுதீனுக்கும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் திருச்சி காட்டூா் பாப்பா குறிச்சி அண்ணா நகா் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த ஜோஸ்வா அமல்ராஜ் (18),
தென்னூா் பட்டாபிராமன் சாலையைச் சோ்ந்த ஹரிஹரன் (18), அரியமங்கலம் நாயுடு தெருவை சோ்ந்த 17 வயது சிறுவன், நவ்ஷாத் ஆகிய 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் கமாலுதீனின் தலையில் கட்டையால் தாக்கி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த முகமது கமாலுதீனை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜோஸ்வா அமல்ராஜ, ஹரிஹரன், சிறுவன் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பி ஓடிய நவ்ஷாத்தை தேடி வருகின்றனா்.