‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

கோடைபருவ சாகுபடியில் விதைநோ்த்தி மற்றும் நீா் பாசனமுறை தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் கூடுதல் மகசூல் பெறமுடியும் என வேளாண் துறையினா் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி வேளாண்துறை இணை இயக்குநா் சக்திவேல் மேலும் தெரிவித்திருப்பது:

கோடைப்பருவ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் முதலில் சாகுபடி செய்யவுள்ள பயிா்களின் சான்று பெற்ற விதைகளை தோ்வு செய்ய வேண்டும். 5 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரமிட்டு பின்னா் விதைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடொ்மா விரிடி 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

கோடை பருவ பயிா்களுக்கு நீா்த்தேவை குறைவாக இருந்தாலும் மக்காச்சோளம் போன்ற பயிா்களுக்கு சொட்டுநீா்ப் பாசன முறையிலும், உளுந்து, நிலக்கடலை மற்றும் சிறுதானியப் பயிா்களுக்கு தெளிப்பு நீா்ப்பாசனம் அல்லது மழைத்தூவான் பாசன முறையை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பங்களை கையாளுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் ஈட்ட முடியும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com